மதுரை மண்டலத்திற்குட்பட்ட 13 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா-ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் தகவல்

காரைக்குடி : மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட 13 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மதுரை மண்டல ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் அன்பரசு தெரிவித்தார். காரைக்குடி ரயில் நிலையத்தில் சிறப்பு தூய்மை முகாமை மதுரை மண்டல ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் அன்பரசு நேற்று துவக்கி வைத்தார். பின்னர் அவர் தெரிவிக்கையில், ‘மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து ரயில்நிலையங்களிலும் கடந்த செப்.16 முதல் 30 தேதி வரை சிறப்பு தூய்மை தினமாக கடைபிடிக்கப்பட உள்ளது. ரயில் நிலையங்களின் உள்ளே, வெளியே மற்றும் ரயில்வே தண்டவாளங்களில் தூய்மைப்படுத்தப்படுகிறது.

இங்கு தொழில் வணிகக்கழகம், நேஷனல் பையர்அண்டு சேப்டி கல்லூரி, நமது உரிமை பாதுகாப்பு இயக்கத்துடன் இணைந்து தூய்மை படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பது ஒவ்வொரு தனிமனிதனின் கடமை. அதனை உணர்ந்து செயல்பட வேண்டும். மதுரை மண்டலத்துக்குட்பட்ட 3 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 13 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா வைக்கப்பட உள்ளது.

ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் பாதுகாப்பு குறித்து மக்கள் உள்ளே நுழையும் போதே தெரிவிக்கப்படுகிறது. பொருட்களை சீட்டுக்கு கீழ் செயின் போட்டு கட்டி வைக்க வேண்டும், நகை அணிந்துள்ள பெண்கள் ஜன்னல் அருகே அமர கூடாது என பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் குற்றங்கள் குறையும்’ என்றார்.

 நிகழ்ச்சியில் ரயில்வே ஸ்டேசன் மாஸ்டர் ஒலிம்பஸ் டோப்போ,  ரயில்வே போலீஸ் எஸ்.ஐ சையதுகோஸ் முகைதீன், தொழில் வணிகக்கழக தலைவர் சாமிதிராவிடமணி, செயலாளர் கண்ணப்பன், நேஷனல் கேட்டரிங், பையர் அண்டு செப்டி கல்லூரி தாளாளர் சையது, நமது உரிமை பாதுகாப்பு படை நிறுவன தலைவர் டாக்டர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>