திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம்-தேர்தல் பார்வையாளர் தலைமையில் நடந்தது

திருப்பத்தூர் : திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்திற்கு தேர்தல் பார்வையாளர் காமராஜ் தலைமை தாங்கினார்.

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடந்தது. மாவட்ட தேர்தல் பார்வையாளர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனர் காமராஜ் தலைமை தாங்கினார். கலெக்டர் அமர்குஷ்வாஹா, எஸ்பி பாலகிருஷ்ணன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர்  நலத்துறை இயக்குனர் காமராஜ் பேசியதாவது:

திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. 13 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 125 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 208 ஊராட்சி மன்ற தலைவர்கள், 1,779 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.வாக்குச்சாவடி விவரங்கள், பதட்டமான வாக்குச்சாவடி விவரங்கள், வீடியோ படம் எடுக்க வேண்டிய மையங்கள், தேர்தல் நுண்(மைக்ரோ) பார்வையாளர்களாக நியமனம் செய்வது, வாக்குப்பதிவு அலுவலர் நியமனங்கள், அவர்களுக்கான பயிற்சி வகுப்புகள், பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கான அஞ்சலக வாக்குகளை பெறுதல், மண்டல அலுவலர்கள் அமைத்தல், வாக்குப்பதிவு பொருட்கள், வாக்குச்சீட்டுகளை அச்சடித்தல், அச்சகங்கள் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் வாக்குச்சீட்டு வழங்குதல், வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியோர் தேர்தலில் பணியாற்றும் அலுவலர்கள் அனைவரும் தனித்தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த பணிகளை மாநில தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி நடத்த வேண்டும்.

 ஊரக உள்ளாட்சி தேர்தலை சுமூகமாகவும், பதட்டம் இல்லாமலும், வெளிப்படையாகவும் நடத்த வேண்டும். நாம் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக்கவசம் அணிவது போன்ற கொரோனா விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை, மகளிர்  திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வில்சன்ராஜசேகர், செல்வன், ஹரிஹரன், வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>