உலக நுரையீரல் தினமான இன்று அனைவரும் புகைப்பிடித்தலை புறக்கணிப்போம் என உறுதி மொழியை ஏற்போம் : ஓபிஎஸ் வேண்டுகோள்!!

சென்னை : உலக நுரையீரல் தினமான இன்று அனைவரும் புகைப்பிடித்தலை புறக்கணிப்போம் என உறுதி மொழியை ஏற்க வேண்டும் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், “மனித உடலின் செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு உறுப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றாலும், உடலுக்கு உயிர் சக்தியைத் தரும் உன்னத பணியாம் வாயு பரிமாற்றத்தை மேற்கொள்ளும் இன்றியமையா பணியை நுரையீரல் செய்து வருகிறது. காற்றிலுள்ள பிராண வாயுவை ரத்தத்தில் சேர்த்து ரத்தத்தில் உள்ள கரியமிலவாயு கைபிடித்து உடலில் இருந்து வெளியேற்றுவது இதயத்தை அதிர்வுகளில் இருந்து, காப்பாற்றுவது முக்கிய வேதிப் பொருட்களை உற்பத்தி செய்வது சில வேதிப் பொருட்களை செயலிழக்கச் செய்வது போன்ற உடலுக்கு உயிர்தரும் பணிகளை மேற்கொள்வதால் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து செப்டம்பர் 25-ஆம் நாள் உலக நுரையீரல் தினமாக கொண்டாடப்படுகிறது.

இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த நுரையீரலை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். புகை பிடித்தல் காரணமாக நுரையீரலுக்குள் சென்று அங்கேயே படிந்து இவற்றிலுள்ள நிகோடின் என்ற வேதிப்பொருள் ரத்தத்தில் உள்ள, கனிமப் பொருள்களின் அளவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தி ,பல்வேறு தீமைகள் ஏற்படுகின்றன . புகை பிடிப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களுக்கு அருகில் உள்ளவர்களுக்கும் இந்த பாதிப்புகள் ஏற்படுகின்றன. இவற்றைத் தவிர்க்க உலக நுரையீரல் தினமான இன்று அனைவரும் புகைப்பிடித்தலை புறக்கணிப்போம் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். புகை பிடித்தலை கைவிடுவோம் நுரையீரலைப் பாதுகாப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

More
>