ஒன்றிய அரசு தகவல் புதிய ஐடி விதிகளுக்கு இணங்கியது டிவிட்டர்

புதுடெல்லி: புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு ஏற்ப, உள்நாட்டில் குறைதீர் அதிகாரிகளை டிவிட்டர் நிறுவனம் நியமித்திருப்பதாக ஒன்றிய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த, ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு டிவிட்டர் மட்டும் இணங்காமல் இருந்தது. புதிய சட்டப்படி, உள்நாட்டை சேர்ந்த குறைதீர் அதிகாரிகளை டிவிட்டர் நியமிக்காததால், இந்தியாவில் வழங்கப்படும் சட்ட பாதுகாப்பை ஒன்றிய அரசு வாபஸ் பெற்றது. இதனால், டிவிட்டரில் வெளியான சர்ச்சைக்குரிய பதிவுகளுக்கு அந்நிறுவனத்தின் மீது போலீசார் பல்வேறு வழக்கு தொடர்ந்தனர்.

இதற்கிடையே, புதிய ஐடி விதிகளுக்கு டிவிட்டர் இணங்காதது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஒன்றிய அரசு தரப்பில் இடைக்கால பிரமாண பத்திரம் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘டிவிட்டர் நிர்வாகம் புதிய ஐடி விதிகளுக்கு இணங்க, உள்நாட்டைச் சேர்ந்த குறைதீர் அதிகாரிகள் 3 பேரை நியமித்துள்ளது. அவர்கள் கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய ஐடி விதிகளை எப்போதும் டிவிட்டர் கடைபிடிக்க வேண்டும். அதை மீறினால் சட்ட பாதுகாப்பை இழக்க வேண்டியிருக்கும்’ என கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு அடுத்த மாதம் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>