×

நான் பள்ளிக்கு செல்ல வேண்டும் எங்கள் கல்வி உரிமையை பறிக்க தலிபான்கள் யார்?...ஆப்கானில் சிறுமி ஆவேச பேச்சு உலகளவில் வைரலாகும் வீடியோ

காபூல்: ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான் தீவிரவாத அமைப்பு சமீபத்தில் மீண்டும் ஆட்சியை பிடித்த பிறகு, இந்த நாட்டில் வழக்கம் போல் பெண்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. தனியார், அரசு அலுவலகங்களில் பெண்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை. பள்ளிகள், கல்லூரிகள், மதராசாக்களில் மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மாணவிகள், ஆசிரியைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், தங்களை கல்வி நிலையங்களுக்கு செல்ல அனுமதிக்கும்படி கல்லூரி மாணவிகளும், சிறுமிகளும் வீதிக்கு வந்து போராட்டம் நடத்துகின்றனர்.

தலிபான்களுக்கு இதுபோன்ற எதிர்ப்பு காட்டப்படுவது, ஆப்கானிஸ்தானில் இதற்கு முன் அவர்கள் ஆட்சி செய்த போது நடந்திராத ஒரு சம்பவம். இந்நிலையில், இந்த போராட்டத்தில் பெண்கள் கல்வியின் முக்கியத்துவம் பற்றி சிறுமி ஒருவர் ஆங்கிலத்தில் ஆவேசமாக  பேசும் வீடியோ, உலகளவில் வைரலாக பரவி வருகிறது. அதில் அந்த சிறுமி பேசி இருப்பதாவது: நான் பள்ளிக்கு செல்ல வேண்டும். கல்வி கற்பதின் மூலமே நாட்டின் வளர்ச்சிக்கு நாங்கள் ஏதாவது செய்யக் கூடிய வாய்ப்பு கிடைக்கும். கடவுள் எங்களுக்கு இந்த வாய்ப்பை கொடுத்துள்ளார். ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை உள்ளது.

 இந்த வாய்ப்பையும், எங்களின் உரிமைகளையும் பறிக்க தலிபான்கள் யார்? இன்றைய சிறுமிகள் நாளைய அம்மாக்கள். அவர்களுக்கு கல்வி கிடைக்கவில்லை என்றால், தங்களின் பிள்ளைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை எப்படி அவர்களால் போதிக்க முடியும்? நான்  புதிய தலைமுறையை சேர்ந்தவள். சாப்பிட்டு, தூங்கி வீட்டிலேயே முடங்கி கிடப்பதற்காக நான் பிறக்கவில்லை. நான் பள்ளிக்கு செல்ல வேண்டும். இந்த நாட்டின் வளர்ச்சிக்கு நான் ஏதாவது செய்தாக வேண்டும். பெண்களுக்கு கல்வி இல்லாமல் நம்முடைய நாடு எப்படி முன்னேற்றம் அடையும் என்பதை சிறிது சிந்தித்து பாருங்கள். நமது எதிர்கால சந்ததி எப்படி நல்ல ஒழுக்கத்துடன் இருக்க முடியும்? கல்வி இல்லை என்றால், இந்த உலகத்தில் நமக்கு எந்த மதிப்பும் இருக்காது.
இவ்வாறு சிறுமி பேசி இருக்கிறாள்.

ஆப்கானிஸ்தானின் மலாலா
பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள சிறிய கிராமத்தை சேர்ந்தவர் மலாலா யூசப்சையி. தனது பத்து வயதிலேயே, தீவிரவாதிகளின் அடக்குமுறையை மீறி பெண்கள் கல்விக்காக குரல் கொடுத்தார். இதனால், இந்த மாகாண எல்லையில் செயல்படும் தலிபான்கள் தீவிரவாதிகள், கடந்த 2012, அக்டோபர் 9ம் தேதி இவரை சுட்டுக் கொல்ல முயன்றனர். தலையில் குண்டு பாய்ந்து உயிருக்கு போராடிய அவர், உலக நாடுகளின் தீவிர சிகிச்சையால் பிழைத்தார். பின்னர், உலகளவில் மிகவும் புகழ் பெற்றார். இவருடைய பேச்சுகளில் பாகிஸ்தான், ஆப்கான் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக பொறி பறந்தது. கடந்த 2014ம் ஆண்டு, அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.  சிறு வயதில் இந்த பரிசை பெற்ற முதல் பெண் இவர்தான். ஆப்கானில் கல்விக்காக குரல் கொடுத்துள்ள சிறுமி, தற்போது மலாலாவை நினைவுப்படுத்தும் வகையில் உள்ளார்.

Tags : Taliban , To go to school, right to education, Taliban, Afghan., Girl
× RELATED ஆப்கானிஸ்தானில் 13 வயதிற்கு மேல் பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல தடை