ஆஸ்ட்ரவா ஓபன் டென்னிஸ் காலிறுதியில் தெரசா போராடி தோற்றார்

ஆஸ்ட்ரவா: செக் குடியரசில் நடக்கும் ஆஸ்ட்ரவா ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், உள்ளூர் வீராங்கனை தெரசா மார்டின்கோவா போராடி தோற்றார். நடப்பு சீசனில் விளையாடிய தொடர்களில் 5வது முறையாக காலிறுதிக்கு முன்னேறி இருந்த மார்டின்கோவா (26 வயது, 61வது ரேங்க்), கிரீஸ் வீராங்கனை மரியா சாக்கரியுடன் (26 வயது, 12வது ரேங்க்) நேற்று மோதினார். விறுவிறுப்பாக அமைந்த முதல் செட்டை 7-5 என கைப்பற்றிய சாக்கரி, அடுத்த செட்டில் அதிரடியாக விளையாடி 6-3 என நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 36 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

அரையிறுதியில் சானியா ஜோடி: இதே தொடரின் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா -  ஷுவாய் சாங் (சீனா) ஜோடி நேற்று அன்னா டானிலினா (கஜகிஸ்தான்) - லிட்ஸியா மரோஸவா (பெலாரஸ்)  இணையுடன் மோதியது. இதில் சானியா ஜோடி 6-3, 3-6, 10-6 என்ற செட் கணக்கில் போராடி வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. இப்போட்டி 1 மணி, 12 நிமிடத்துக்கு நீடித்தது.

Related Stories: