கடைசி பந்துவரை திக்... திக்... ஒருநாள் தொடரை வென்றது ஆஸி.

மெக்கே: இந்திய மகளிர் அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில் கடைசி பந்தில் வெற்றியை தட்டிப் பறித்த ஆஸ்திரேலியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. ரே மிட்செல் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸி. முதலில் பந்துவீசியது. இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 274 ரன் குவித்தது. தொடக்க வீராங்கனை மந்தனா 86 ரன் (94 பந்து, 11 பவுண்டரி) விளாசினார். ஷபாலி 22, கேப்டன் மிதாலி 8, யாஸ்திகா 3, ரிச்சா கோஷ் 44, தீப்தி 23, பூஜா வஸ்த்ராகர் 29 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். ஜுலன் கோஸ்வாமி 28 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அடுத்து களமிறங்கிய ஆஸி. அணி 15.5 ஓவரில் 52 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், பெத் மூனி - தஹ்லியா மெக்ராத் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 126 ரன் சேர்த்தது. தஹ்லியா 74 ரன் (77 பந்து, 9 பவுண்டரி) விளாசி தீப்தி பந்துவீச்சில் யாஸ்திகா வசம் பிடிபட்டார். அடுத்து வந்த நிகோலா கேரி பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, பெத் மூனி சதத்தை நிறைவு செய்தார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர்.

கடைசி ஓவரில் 13 ரன் தேவைப்பட்டதால் பரபரப்பு நிலவியது. எனினும், ஜுலன் கோஸ்வாமி வீசிய அந்த ஓவரில் உதிரியாக 2 நோ பால், ஒரு பை, ஒரு லெக் பை மற்றும் பதற்றமான பீல்டிங் என இந்திய வீராங்கனைகள் சொதப்பியதால், ஆஸ்திரேலியா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 275 ரன் எடுத்து தொடர்ச்சியாக 26வது வெற்றியை வசப்படுத்தியது. மூனி 125 ரன் (133 பந்து, 12 பவுண்டரி), நிகோலா 39 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மூனி சிறந்த வீராங்கனை விருது பெற்றார். ஆஸி. 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிய நிலையில், 3வது போட்டி மெக்கேவில் நாளை நடக்கிறது.

Related Stories:

More
>