×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச டிக்கெட்கள் நிறுத்தம் பஸ்சை சிறை பிடித்து மறியல்: தமிழக பக்தர்கள் 15 பேர் கைது

திருமலை:  திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் வழங்காததால் அரசு பஸ்சை சிறைபிடித்து மறியல் செய்த தமிழக பக்தர்கள் 15 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவல் காரணமாக, இலவச தரிசன டிக்கெட் வழங்குவது நிறுத்தப்பட்டது. கடந்த 8 மாதங்களாக ஆன்லைன் மூலம் ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள், விஐபி தரிசன டிக்கெட் பெற்றவர்கள் மட்டுமே தரிசனம் செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த 20ம் தேதி அனைத்து மாநில பக்தர்களுக்கும் இலவச தரிசன டிக்ெகட் வழங்கப்பட்டது. தினமும் 8 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே இது வழங்கப்பட்டது.

ஆனால், இதை பெறுவதற்கு தினமும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்ததால், கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனால், இன்று முதல் ஆன்லைனில் மூலமாக மட்டுமே டிக்கெட் வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்தது. இதனால், இன்று இரவு வரை தரிசனம் செய்வதற்கான இலவச டிக்கெட்டுகள் நேற்று முன்தினம் இரவே வழங்கப்பட்டு விட்டது. இருப்பினும், டிக்கெட்டை பெறுவதற்காக சீனிவாசா பக்தர்கள் ஓய்வறையில் நேற்று நள்ளிரவு முதல் பல்வேறு மாநில பக்தர்கள் காத்திருந்தனர். ஆனால், டிக்கெட் தர இயலாது என தேவஸ்தான அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்ததால், பக்தர்கள் ஆத்திரமடைந்தனர்.

இலவச டிக்கெட் வழங்க வலியுறுத்தி, தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் ஆந்திர அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்ததால், போலீசார் அவர்களை சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை. இதனால், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 15 பக்தர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Tirupati Ezhumalayan Temple ,Tamil Nadu , Tirupati, Ezhumalayan temple, free tickets, picket, Tamil Nadu devotees arrested
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...