×

விருத்தாசலத்தில் 18 ஆண்டுக்கு முன் நடந்த ஆணவக்கொலை வழக்கில் பெண்ணின் அண்ணனுக்கு தூக்கு 12 பேருக்கு ஆயுள் தண்டனை: கடலூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

கடலூர்: : கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் புதுக்காலனியைச்சேர்ந்தவர் சாமிகண்ணு மகன் முருகேசன் (25). பட்டியலின சமூகத்தை சேர்ந்த இவருக்கும், அதேப்பகுதியில் வசித்த மாற்று சமூகத்தை சேர்ந்த அப்போதைய ஊராட்சி மன்ற தலைவருமான துரைசாமி மகள் கண்ணகி (22) என்பவருக்கும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது காதல் ஏற்பட்டது. தங்கள் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள் என நினைத்த இருவரும் கடந்த 2003ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி கடலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து முருகேசன் தனது மனைவி கண்ணகியை தற்போதைய கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டிலுள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்தார். கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வண்ணாங்குடிகாட்டிலுள்ள வேறு ஒரு உறவினர் வீட்டில் முருகேசன் தங்கியிருந்தார். கண்ணகியை காணாமல் தேடிய அவரது உறவினர்களுக்கு இவர்களின் காதல் விவகாரம் தெரியவந்தது. இதையடுத்து முருகேசனின் சித்தப்பா அய்யாசாமி மூலம் தேடிப்பிடித்து முருகேசனையும், மூங்கில்துறைப்பட்டிலிருந்து கண்ணகியையும் 2003ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி குப்பநத்தம் கிராமத்துக்கு அழைத்து வந்தனர். அன்றைய தினமே இருவரையும் மயானத்துக்கு அழைத்து சென்று கை, கால்களை கட்டி ஊர்மக்கள் முன்னிலையில் காது மற்றும் மூக்கில் விஷத்தை ஊற்றினர். இதையடுத்து இருவரின் சடலங்களையும் தனித்தனியாக எரித்ததாக தெரிகிறது.  

இந்த கொடுமையான சம்பவம் குறித்து முருகேசனின் உறவினர்கள் விருத்தாசலம் காவல்துறையிடம் புகார் தெரிவித்தபோது., இது தற்கொலை எனக்கூறி புகாரை ஏற்காமல் போலீசார் திருப்பி அனுப்பினர். சிலநாட்களுக்கு பின்னர் ஊடகங்களில் ஆணவப்படுகொலை நடத்தப்பட்டதாக செய்தி வெளியானது.  18 நாட்களுக்கு பிறகு கிராம நிர்வாக அலுவலரிடம் புகாரை பெற்ற போலீசார், முருகேசன், கண்ணகி ஆகியோர் சாதி மாறி திருமணம் செய்ததால் அவரவர் தரப்பினர் தங்களது பிள்ளைகளை கொலை செய்ததாகக் கூறி இரு தரப்பிலும் தலா 4 பேர் வீதம் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து முடித்துக்கொண்டனர்.

 ஆனால் இந்தக் கொலைகள் சாதி ஆணவத்தில் நடத்தப்பட்டதாக கூறி வழக்கை சிபிஐக்கு ஒப்படைக்க வேண்டுமென பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தியது. அதன்படி இந்த வழக்கில் 2004ம் ஆண்டு சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் கண்ணகியின் தந்தை துரைசாமி, அவரது மகன் மருதுபாண்டி மற்றும் வழக்கை சரியாக நடத்தாமல் கொலையை மறைக்க முயற்சி செய்த அப்போதைய விருத்தாசலம் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் செல்லமுத்து, சப் இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் உள்ளிட்ட 15 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.  இந்த வழக்கு கடலூர் மாவட்ட எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் மொத்தம் 81 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இதில் 36 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர்.  இந்த வழக்கின் விசாரணை நேற்று முடிவடைந்து நீதிபதி உத்தமராசா தீர்ப்பளித்தார். இதில் 13 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார்.

இதில்  கண்ணகியின் தந்தை துரைசாமி, அண்ணன்  மருதுபாண்டி(49) ஆகியோரும், குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் செயல்பட்ட  இன்ஸ்பெக்டர் செல்வமுத்து(ஓய்வுபெற்ற டிஸ்பி), சப்-இன்பெக்டர் தமிழ்மாறன்  மற்றும் ரங்கசாமி, கந்தவேலு, ஜோதி, வெங்கடேசன், மணி, தனவேல், அஞ்சாபுலி  ராமதாஸ், சின்னதுரை உள்ளிட்ட 13 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்தார்.  இதில் கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிக்கு தூக்கு தண்டனையும், மற்ற 12  பேருக்கும் ஆயுள் தண்டனையும் விதித்தார். முருகேசனின் சித்தப்பா அய்யாசாமி மற்றும் உறவினர் குணசேகரன் விடுவிக்கப் பட்டனர்.

‘‘தமிழக வரலாற்றை பொறுத்தவரை கண்ணகி எரித்ததாகவே இருக்கட்டும்’’
18 ஆண்டு காலமாக நடைபெற்ற வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி உத்தமராசா, உச்சநீதிமன்றம் ஆணவக்கொலைக்காக அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டினார். இந்த ஆணவக்கொலைகள் எளிய மக்களை அச்சுறுத்தக்கூடியதாக இருக்கிறது. தமிழக வரலாற்றை பொறுத்தவரை கண்ணகி எரித்ததாகவே இருக்கட்டும் எனவும் குறிப்பிட்டார்.  மிகவும் காட்டுமிரண்டித்தனமாக இந்த கொடுமையான படுகொலைகள் நடத்தப்பட்டிருப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

முருகேசன் குடும்பத்துக்கு இழப்பீடு
படுகொலைகளை மறைத்த இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன்(51), ஓய்வு பெற்ற டிஎஸ்பி செல்லமுத்து(66) ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்ததோடு முருகேசன் குடும்பத்துக்கு இருவரும் தனித்தனியாக ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும்
ரூ. 1.15 லட்சம் அபராத தொகையை செலுத்தவும் உத்தரவிட்டார். அதேபோல் கண்ணகியின் தந்தை துரைசாமி உள்ளிட்ட   10 பேருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய அபராத தொகை ரூ. 4.15 லட்சம் செலுத்துமாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையொட்டி நீதிமன்ற வளாகம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Tags : Cuddalore ,Vriddhachalam , Manslaughter, death penalty, life sentence, court
× RELATED கள்ள ஓட்டு போட முயற்சி பாஜ...