சிறுமிக்கு பாலியல் தொல்லை ஆசாமிக்கு 5 ஆண்டு சிறை

தண்டையார்பேட்டை: பிராட்வே ஏழுகிணறு பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமிக்கு, ராயபுரம் ஆடுதொட்டியை சேர்ந்த கணேசன் (48) என்பவர் கடந்த 2020ம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய், ராயபுரம் அனைத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, போக்சோ சட்டத்தில் கணேசனை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சென்னை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலட்சுமி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளி கணேசனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு நஷ்ட ஈடாக அரசு 2 லட்சம் வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து, குற்றவாளி கணேசனை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் புழல் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை சிறப்பாக கையாண்ட காவல் ஆய்வாளர் மணிமேகலை மற்றும் காவல் துறையினரை உதவி ஆணையர் உக்கிரப்பாண்டியன், கூடுதல் துணை ஆணையர் ஆனந்தகுமார், வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சிவபிரசாத் ஆகியோர் பாராட்டினர்.

Related Stories:

More
>