லோயர்கேம்பில் இருந்து மதுரைக்கு தண்ணீர்: லோயர் தடுப்பணை, நீரேற்று நிலைய பகுதியில் அதிகாரிகள் ஆய்வு

கூடலூர்: லோயர்கேம்பிலிருந்து மதுரைக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல இப்பகுதி மக்களும் விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மதுரை மாநகராட்சி அதிகாரிகள் லோயரில் தடுப்பணை, நீரேற்று நிலைய பகுதியை நேற்று ஆய்வு செய்து படமெடுத்து சென்றனர். ரூ.1295 கோடி செலவில் முல்லை பெரியாற்று தண்ணீரை மதுரைக்கு குழாய் மூலம் கொண்டு செல்லும் மதுரைக்கான குடிநீர் சிறப்பு திட்டத்தில், பெரியாற்றின் தலைமதகான லோயர்கேம்ப்பில் தடுப்பணை கட்டி குழாய் மூலம் குள்ளப்பகவுண்டன்பட்டி, ஆண்டிபட்டி வழியாக தண்ணீர் கொண்டு செல்ல கடந்த அதிமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டது.

இத்திட்டத்தில், கம்பம் கூட்டுக்குடிநீர் திட்ட தடுப்பணைக்கு மேல் பகுதியில் புதிய தடுப்பணை கட்டி தண்ணீர் கொண்டு செல்ல உள்ளதால், கோடைகாலங்களில் பெரியாறு அணையிலிருந்து திறந்துவிடப்படும் குறைந்த அளவு தண்ணீர் கம்பம் கூட்டுகுடிநீர் திட்ட தடுப்பணைக்கு வந்து சேராது. மேலும் தண்ணீர் குழாய்வழி கொண்டு சென்றால் தேனிமாவட்ட மக்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தண்ணீர் பிரச்னை ஏற்படும் என்பதால் இத்திட்டத்திற்கு இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஜூன் 19ல் மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், கட்டுமான பிரிவு பொறியாளர் அரசு தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் கொண்ட குழுவினர், கம்பம் கூட்டுக்குடிநீர் திட்ட தடுப்பணைக்கு மேல் பகுதியில் தடுப்பணை கட்ட உள்ள இடத்தில் ரகசிய ஆய்வு செய்து சென்றனர். இந்நிலையில் நேற்று, மதுரை மாநகராட்சியிலிருந்து வந்த அதிகாரி ஈஸ்வரன் தலைமையில் அதிகாரிகள் லோயரில் தடுப்பணை மற்றும் நீரேற்று நிலைய பகுதியை போட்டோ மற்றும் வீடியோ எடுத்தனர். ரகசியமாக நடந்த இந்த ஆய்வின் போது, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் யாரும் உடன் வரவில்லை.

இப்பகுதி பொதுமக்கள் தடுப்பணை கட்ட எதிர்ப்பு தெரிவித்த இடத்தில் மீண்டும் மாநகராட்சி அதிகாரிகள் ரகசியமாக ஆய்வு செய்வது குறித்த தகவல் கிடைத்ததும் கூடலூர் விவசாயிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால் அதற்குள்ளாக அதிகாரிகள் ஆய்வை முடித்து கிளம்பி விட்டனர். இதுகுறித்து கூடலூர் மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் புதுராஜா கூறுகையில், ‘மதுரைக்கு தண்ணீர் கொண்டு செல்ல கம்பம் கூட்டுக்குடிநீர் திட்ட தடுப்பணைக்கு மேல் பகுதியில் புதிய தடுப்பணை கட்டினால், கோடை காலங்களில் கம்பம் பள்ளத்தாக்கு மக்களுக்கு குடிநீர் கிடைக்க வாய்ப்பில்லை. ராட்சத குழாயில் தண்ணீர் கொண்டு சென்றால் நிலத்தடி நீர்மட்டம் குறையும்.

தேனி மாவட்டம் பாலைவனமாகும். இதனால்தான் இந்த திட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். வழக்கம்போல் பெரியாறு தண்ணீரை ஆற்றின்வழியாக கொண்டு சென்று வைகையில் தேக்கி வைத்து அங்கிருந்து மதுரைக்கு எவ்வளவு தண்ணீர் வேண்டுமானாலும் கொண்டு செல்லுங்கள். அதிமுக அரசு கொண்டுவந்த இத்திட்டத்தினால் தேனிமாவட்டம் பாலைவனமாகும் முன் தமிழக முதல்வர் ஸ்டாலின் இதற்கு மாற்று ஏற்பாடு கொண்டு வர வேண்டும்’ என்றார். 

Related Stories:

More
>