தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாச்சலம் வீட்டில் மேலும் 3 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வீட்டில் மேலும் 3 கிலோ தங்கத்தை லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல் செய்தது. வெங்கடாச்சலத்தின் வங்கி லாக்கர்களை திறந்து சோதனை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். முன்னதாக நடந்த சோதனையில் 8 கிலோ தங்கம், 10 கிலோ சந்தனப் பொருட்கள், ரூ.13.5 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் லஞ்சம் வாங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்ததின் அடிப்படையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருக்கக்கூடிய வெங்கடாச்சலத்திற்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். 11 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. கிண்டியில் உள்ள அலுவலகம், வேளச்சேரியில் உள்ள வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனை இன்று அதிகாலை நிறைவடைந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனையில் 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான 6.5 கிலோ தங்கம் நேற்று பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. 13.50 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருந்ததாக நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று சோதனையின் முடிவில் மேலும் 3 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 கிலோ சந்தன பொருட்களும் சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தன பொருட்கள் தொடர்பாக ஏற்கனவே வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களும் இதுதொடர்பாக அடுத்தக்கட்ட விசாரணையை நடத்த உள்ளனர். அடுத்ததாக வெங்கடாச்சலத்தின் வங்கி லாக்கரை சோதனை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories:

More