மோசெல் ஓபன் டென்னிஸ்: ஹர்காஸ், மான்ஃபில்ஸ் காலிறுதிக்கு தகுதி..!

மெட்ஸ்: மோசெல் ஓபன் டென்னிஸ் காலிறுதிக்கு போலந்தின் ஹியூபர்ட் ஹர்காஸ், பிரான்சின் கேல் மான்ஃபில்ஸ், அமெரிக்காவின் மார்கோஸ் ஜிரான் மற்றும் ஜெர்மனியின் பீட்டர் கோஜோவ்சிக் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். பிரான்சின் மெட்ஸ் நகரில் நேற்று இரவு நடந்த மோசெல் ஓபன் டென்னிஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் போலந்தின் ஹியூபர்ட் ஹர்காசும், பிரான்சின் லூகாஸ் பவுல்லியும் மோதினர். இதில் ஹர்காஸ் 6-2, 6-3 என நேர் செட்களில் எளிதாக லூகாசை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் பிரான்ஸ் வீரர் கேல் மான்ஃபில்ஸ் 7-6, 6-4 என நேர் செட்களில் ஜெர்மனியின் இளம் வீரர் கோஹிஷ்ரெபெரை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறினார். ஜெர்மனியின் மற்றொரு வீரர் பீட்டர் கோஜோவ்சிக், ரஷ்யாவின் கேரன் காச்சனோவை 6-3, 7-6 என நேர் செட்களில் வீழ்த்தினார். அமெரிக்காவின் மார்கஸ் ஜிரான், ஆஸ்திரேலிய வீரர் அலெக் டி மினாரை கடும் போராட்டத்திற்கு பின்னர் 7-5, 7-6 என வீழ்த்தி, காலிறுதிக்குள் நுழைந்தார்.

ஜார்ஜியாவை சேர்ந்த நிகோலோஸ் பாசிலாஷ்விலி, ஸ்பெயினின் டேவிடோவிச் போகினாவுடன் மோதினார். இதில் முதல் செட்டை டேவிடோவிச் 6-0 என கைப்பற்றி மிரட்டினார். இருப்பினும் அடுத்த செட்டை 6-4 என பாசிலாஷ்விலி கைப்பற்ற, போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியது. 3வது செட்டில் இருவருமே விட்டுக் கொடுக்காமல் போராடினார்கள். அவரவர் கேம்களை தக்க வைத்துக் கொண்டனர். இதனால் அந்த செட் டைபிரேக்கர் வரை நீடித்தது. ஒரு வழியாக டைபிரேக்கரில் 7-6 என அந்த செட்டை கைப்பற்றிய பாசிலாஷ்விலி, இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு முன்னேறினார்.

Related Stories: