திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன டிக்கெட் வழங்காததால் சாலை மறியல்; அரசு பஸ் சிறைபிடிப்பு: தமிழக பக்தர்கள் 15 பேர் கைது

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நள்ளிரவு முதல் காத்திருந்தும் இலவச தரிசன டிக்கெட் வழங்காததால் பக்தர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து தமிழக பக்தர்கள் 15 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் நெரிசலை தவிர்க்க சுமார் 8 மாதங்களாக ஆன்லைன் மூலம் ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள், விஐபி தரிசன டிக்கெட் பெற்றவர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்து வந்தனர்.

கொரோனா பரவல் குறைந்ததால் சில வாரங்களுக்கு முன் உள்ளூர் பக்தர்கள் மட்டும் தினமும் 2ஆயிரம் பேருக்கு இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து கடந்த 20ம்தேதி முதல் வெளிமாநில பக்தர்களுக்கும் இலவச டிக்கெட் வழங்கப்பட்டது. இந்த டிக்கெட்டுகள் திருப்பதி பஸ் நிலையம் அருகே உள்ள தேவஸ்தான சீனிவாசா பக்தர்கள் ஓய்வறையில் வழங்கப்பட்டு வந்தது. இவ்வாறு தினமும் 8 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் இந்த டிக்கெட் பெறுவதற்கு தினமும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இரவு முதல் காத்திருக்கின்றனர்.

இதனால் கூட்டம் சேருவதை தவிர்க்க தேவஸ்தான அதிகாரிகள், அடுத்தடுத்த நாட்களுக்குரிய டிக்கெட்களையும் தொடர்ந்து வழங்கினர். பக்தர்கள் கூட்டத்தை தவிர்க்க, நாளை முதல் ஆன்லைனில் தினமும் 8 ஆயிரம் இலவச டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டு 26ம்தேதி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் நாளை இரவு வரை சுவாமி தரிசனம் செய்வதற்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் நேற்றிரவே வழங்கப்பட்டு விட்டது. இதையறியாத பக்தர்கள் சீனிவாசா பக்தர்கள் ஓய்வறை எதிரே நள்ளிரவு முதல் காத்திருந்தனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்களின் எண்ணிக்கையே அதிகளவில் இருந்தது. ஆனால் இலவச தரிசன டிக்கெட்டுகள் அனைத்தும் வழங்கிவிட்டதால், டிக்கெட் தர இயலாது என தேவஸ்தான அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் இன்று காலை அறிவித்தனர். இதனால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் இலவச தரிசன டிக்கெட் வழங்கக்கோரி தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் திடீரென அவ்வழியாக சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு வந்து, ‘நாளை வரை அனைத்து டிக்கெட்டுகளும் வழங்கப்பட்டுவிட்ட நிலையில் மீண்டும் தொடர்ந்து டிக்கெட் வழங்க முடியாது’ எனக்கூறி மறியலை கைவிடும்படி கூறினர். ஆனால் பக்தர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக பக்தர்களை தூண்டி மறியலில் ஈடுபட வைத்ததாக தமிழகம் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 15 பக்தர்களை கிழக்கு போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் நாளை முதல் இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Related Stories:

More
>