எடப்பாடி பழனிசாமி ஆதாரம் இன்றி பேசி வருகிறார்: அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

சென்னை: எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆதாரம் இன்றி பேசி வருவதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பொருளாதாரத்தை ஏற்றுமதியின் வாயிலாக மிகப்பெரிய அளவிலே உயர்த்தி செல்வதற்கான ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கையை நாங்கள் வெளியிட்டிருக்கிறோம். கடந்த ஆட்சியில் இந்த கொள்கையே வெளியிடப்படவில்லை.

முதல் முறையாக ஏற்றுமதி கொள்கையை நாங்கள் வெளியிட்டுள்ளோம். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக நாங்கள் கூறிய 505 தேர்தல் வாக்குறுதிகளில் இந்த 130 நாட்களுக்கு உள்ளாக 202 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய அறிவிப்புகளையும் அதற்கான ஆணைகளையும் வெளியிட்டுள்ளோம். அதிமுக கூறிய திட்டங்கள் எல்லாம் முறைகேடுகளும், குளறுபடிகளும் அமைந்த திட்டங்கள் என்பது நகைக்கடன் விவகாரத்தின் மூலம் வெளிவந்துகொண்டிருக்கிறது.

இந்த முறைகேடுகளை எல்லாம் மறைப்பதற்காக எதிர்கட்சி தலைவர் தேவையற்ற, பொருத்தமற்ற, பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இன்றைக்கு அறிவிக்கப்படும் திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறதா என்பதை முதல்வர் நேரடியாக கண்காணித்து வருகிறார். எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எந்தவித அடிப்படை ஆதாரமும் இன்றி பேசி வருகிறார். உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்து மேற்கொண்டு வருகிறது.

சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டதை போல வலிமை சிமெண்ட் வெளிவரக்கூடிய வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை மாதத்தின் புள்ளி விவரத்தின் அடிப்படையில் ரூ.17,147 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த புதிய ஒப்பந்தங்கள் 35 நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories:

More
>