×

புதுவையில் புதிய சட்டசபை கட்டிடம் கட்டுவதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல்: முதல்கட்டமாக ரூ200 கோடிக்கு அனுமதி

புதுச்சேரி: புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் மருத்துவக் கல்லூரியாக இருந்த கட்டிடத்தில் புதுச்சேரி சட்டசபை கடந்த 58 வருடங்களாக இயங்கி வருகிறது. தேஜ கூட்டணி அரசு பொறுப்பேற்றதும் புதிய சட்டசபை வளாகம் கட்டுவதற்கான முயற்சியில் இறங்கியது. முதல்வராக பதவியேற்றதும் மத்திய அரசுக்கு ரங்கசாமி கடிதம் எழுதினார். அதன்பிறகு சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜகவைச் சேர்ந்த ஏம்பலம் செல்வம், தனது கட்சி எம்எல்ஏக்களுடன் ஜூலை 1ம்தேதி டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா ஆகியோரை அடுத்தடுத்து சந்தித்தார்.

அப்போது புதுச்சேரியில் புதிய சட்டசபை கட்டிடம் கட்ட மத்திய அரசிடம் நிதியை மானியமாக தர கோரிக்கை விடுத்தார். அவர்களும் பரிசீலிப்பதாக கூறியிருந்தனர். ஒருங்கிணைந்த சட்டசபை கட்டிடம் கட்ட முடிவெடுத்து 2021 நிதியாண்டில் ரூ.200 கோடியும், 2022ம் நிதியாண்டில் ரூ.100 கோடி என 2 தவணையாக ரூ.300 கோடி நிதி வழங்க மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதனிடையே புதுச்சேரியில் ராஜ்யசபா எம்பி சீட் தற்போது பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. போட்டியின்றி அக்கட்சியின் வேட்பாளரான செல்வகணபதி தேர்வாகவுள்ள நிலையில் புதுச்சேரியில் புதிய சட்டசபை கட்டிடம் கட்டுவதற்கு ரூ.200 கோடிக்கு மத்திய அரசு நேற்று அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கான ஒப்புதல் கடிதம் சபாநாயகர் செல்வத்துக்கு மத்திய அரசால் அனுப்பப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறையின் சார்பு செயலர் அனிதா சைனி, புதுச்சேரி தலைமை செயலருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இத்திட்டம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை மற்றும் கூடுதல் விபரங்களை அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் டெல்லியைச் சேர்ந்த 2 கட்டுமான நிறுவனங்கள் புதுச்சேரியில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



Tags : Puduvai , Central government approves construction of new assembly building in Puduvai: Approval of Rs 200 crore for the first phase
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...