×

2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஓபிசி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட மாட்டாது : ஒன்றிய அரசு திட்டவட்டம்!!

டெல்லி : 2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஓபிசி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட மாட்டாது என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மராட்டிய அரசு தொடர்ந்து இருந்த வழக்கில் ஒன்றிய அரசு பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் கொரோனா பேரிடரில் 2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தள்ளிப்போனதாலும் கணக்கெடுப்பை எந்த அடிப்படையில் நடத்துவது என்பதற்கான பட்டியல் உட்பட அதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தயாராக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துமாறு உச்சநீதிமன்றம் இனி உத்தரவிட்டால் அது தேவையற்ற குழப்பங்களுக்கு வழிவகுப்பது மட்டுமின்றி நிர்வாக ரீதியாகவும் சிக்கலை உருவாக்கும் என்று ஒன்றிய அரசு குறிப்பிட்டுள்ளது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதி வாரியாக எடுக்கப்பட்டாலும் சமூக பொருளாதார நிலை  குறித்த அதன் தரவுகள் துல்லியமாக நம்பத்தன்மை வாய்ந்ததாக இல்லை என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இதனால் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதில் எந்த பயனும் இல்லாமல் போய்விட்டதாக கூறியுள்ள ஒன்றிய அரசு, அதனால் 2021ம் ஆண்டில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதில்லை என்ற கொள்கை முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. அரசின் கொள்கை முடிவிற்கு மாறாக ஓபிசியை உள்ளடக்கிய சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும் ஒன்றிய அரசு தமது பிரமாண பத்திரத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


Tags : OBC Sativari Census , ஓபிசி சாதிவாரி
× RELATED நடப்பாண்டில் அதிகமான வெப்ப அலை...