அதிமுக அரசால் புறக்கணிக்கப்பட்ட பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த தேடிச் சென்று உதவும் திமுக அரசு-செல்லான் காலனி, சிறக்காடு குடியிருப்புவாசிகள் நெகிழ்ச்சி

தேனி : தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே, கீழவடகரை ஊராட்சி செல்லான் காலனியில் பழங்குடி மக்கள் 51 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பண்ணை நிலங்களில் கூலிகளாகவும், மற்ற நேரங்களில் கடுக்காய், தேன், நெல்லி ஆகிய பொருட்களை சேகரித்து விற்பனை செய்தும் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த கடந்த கால அதிமுக அரசு எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில், தற்போதைய திமுக அரசு பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை உயர்த்த தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட செயல் அலுவலரை ஒருங்கிணைப்பு அலுவலராக நியமித்து, பல்வேறு முகாம்களை நடத்தி 6 பேருக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்ட அடையாள அட்டை, 6 பேருக்கு குடும்ப அட்டை, 25 பேருக்கு தேன் சேகரித்தல் மற்றும் பதப்படுத்துதல், விற்பனைக்கான பயிற்சி சான்றிதழ், 15 பேருக்கு வங்கிக் கணக்கு புத்தகங்கள், ஒரு மாற்றுத்திறனாளிக்கு அடையாள அட்டை, 15 பேருக்கு சாதிச்சான்றிதழ், 15 பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை, மகளிர் சுயஉதவிக்குழு ஆளுமை பயிற்சி மூலம் பயிற்சி பெற்ற 11 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான கடனுதவி மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தோட்டக்கலைத்துறை மூலம் உடல் ஆரோக்யத்தை மேம்படுத்த காய்கறிகள், விதைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமாயோஜானா காப்பீடு திட்டம், சுரேக்ஷா பீமா யோஜானா காப்பீடு திட்டம் ஆகிய திட்டங்களின் காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் கீழ் 25 பேருக்கு முதல் தவணையாக தலா ஒருவருக்கு ரூ.330 வீதம் வாழ்நாள் காப்பீடு தொகை மற்றும் 38 பேருக்கு ரூ.12க்கான விபத்துக் காப்பீடு தொகையினை கலெக்டர் முரளீதரன் சொந்த செலவில் அளித்தார்.

சிறக்காடு

இதேபோல, போடி வட்டத்திற்குட்பட்ட சிறக்காடு கிராமத்திற்கு கலெக்டர் முரளீதரன் நேரில் சென்று அரசு நலத்திட்ட முகாம்களை நடத்தி, அவர்களது வாழ்வாதாரம் உயர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தடுப்புப்பணி குறித்தும், தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்தும் கலெக்டர் விளக்கினார்.

இது குறித்து செல்லான் காலனி கருப்பையா மனைவி ஈஸ்வரி கூறுகையில், ‘அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு முன்பு பெரியகுளம் செல்வோம். தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில், கலெக்டர் முரளீதரன் கிராமத்திற்கே நேரில் வந்து, எங்கள் குறைகளை கேட்டறிந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மகளிர்சுய உதவிக்குழு ஆளுமை பயிற்சி முலம் 11 பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கடனுதவி வழங்கினர்.

இதன்மூலம் அகர்பத்தி தயாரிக்கும் தொழில் தொடங்கி உள்ளோம். இதில் கிடைக்கும் வருவாயில் வங்கிக்கடன் செலுத்தியது போக பாக்கி தொகையை குழு உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளித்த பின்னர், தங்களது குழுக்கணக்கில் இருப்பு வைக்க திட்டமிட்டுள்ளோம். வரும் காலத்தில் புதிய தொழில் தொடங்க உள்ளோம்’ என்றார்.

கண்ணன் மனைவி கங்கா கூறுகையில், ‘முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, கலெக்டர் முரளீதரன் எங்கள் கிராமத்திற்கு நேரில் வந்து எங்கள் குறைகளை கேட்டறிந்தார். அவரது உத்தரவுப்படி முகாம்கள் நடத்தப்பட்டு, குடும்ப அட்டைகள், சாதிச்சான்றிதழ்கள், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, மகளிர் சுயஉதவிக்குழு கடனுதவி போன்றவற்றை வழங்கப்பட்டது. எங்கள் கிராமத்தினருக்கு ஆடு, கோழி வளர்ப்பதற்கான பயிற்சி அளித்து, வனப்பொருட்கள் சேகரிப்பதற்கான உரிமம், தையல் பயிற்சி, நலவாரிய அட்டை வழங்குவதாக தெரிவித்துள்ளார். கலெக்டருக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுக்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: