×

சேரம்பாடியில் சாலை வசதி செய்து தரக்கோரி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள்

பந்தலூர் : பந்தலூர் அருகே சேரம்பாடி சப்பந்தோடு பகுதியில் சாலை வசதி செய்து தரக்கோரி கிராமமக்கள் கருப்பு கொடி கட்டி பதாகை வைத்து இடைத்தேர்தல் புறக்கணிக்கப் போவதாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சி கூடலூர் ஒன்றிய 11வது வார்டு கவுன்சிலராக இருந்து வந்த திமுகவை சேர்ந்த ஆனந்தராஜா என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன் காட்டு யானை தாக்கி கொன்றது.

தற்போது, காலியாக உள்ள உள்ளாட்சி வார்டுகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் 11வது வார்டு இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணியை துவக்கி உள்ளனர்.

இந்நிலையில், 11வது வார்டுக்கு உட்பட்ட சேரம்பாடி சப்பந்தோடு பெரிய பாலம் முதல் கப்பன் காலனி வரை சுமார் ஒரு கி.மீ. தூரமுள்ள மண் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதை தார்ச்சாலையாக அமைத்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர்.

ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று அப்பகுதி மக்கள் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக சுங்கம் பகுதியில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த பந்தலூர் வட்டாட்சியர் குப்புராஜ், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் சம்மந்தப்பட்ட சாலை தனியார் தேயிலை தோட்ட கட்டுப்பாட்டில் இருப்பதால் தோட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி கருப்பு கொடிகளை அகற்றுமாறு கூறினார். ஆனால் மக்கள், புகார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் இடைத்தேர்தலை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

Tags : Serampore , Pandalur: Villagers demand road construction in Serampadi Sappandodu area near Pandalur and hold by-elections with black flag and banner.
× RELATED இந்தியாவின் ஒருபகுதி ஆக்கிரமிப்பு...