ஊட்டி - தேனாடுகம்பை சாலையில் இரும்பு தடுப்பு அமைக்கும் பணி மும்முரம்

ஊட்டி : ஊட்டி - தேனாடுகம்பை சாலையில் விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், அனைத்து பகுதிகளுக்கு செல்லும் சாலைகளும் செங்குத்தான மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளுக்கு இடையே அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இச்சாலைகள் வளைந்தும், குறுகலாகவும் காணப்படுகிறது.

குறிப்பாக, கிராமப்புறங்களுக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் சிறியதாகவும், அதேசமயம் அதிக வளைவுகளை கொண்டதாகவும் உள்ளன. மேலும், இச்சாலைகள் தேயிலை தோட்டங்கள், விவசாய நிலங்களுக்கு நடுவே அமைக்கப்பட்டள்ளது. இதனால், சாலைகளில் போதிய பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. அதுமட்டுமன்றி, வாகனங்கள் வேகமாக சென்றால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இதுபோன்ற மலைப்பாங்கான சாலைகளில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலையோரங்களில் பாதுகாப்பு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது.

இதில், வேகமாக சென்று வாகனங்கள் மோதினாலும் விபத்து ஏற்படுவதில்லை. குறிப்பாக, வாகனங்கள் பள்ளங்களில் கவிழ்ந்து விழுவது தடுக்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் பெரும்பாலான கிராமங்களுக்கு செல்லும் சாலையோரங்களில் இது போன்ற இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, ஊட்டியில் இருந்து தேனாடுகம்பை, அணிக்கொரை உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலையோரத்தில் இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

Related Stories:

More
>