மணப்பாறையில் பரபரப்பு சீரான குடிநீர் விநியோகம் கோரி குடங்களுடன் பெண்கள் மறியல்-அதிகாரிகள் சமரசம்

மணப்பாறை : மணப்பாறை பஸ் நிலையம் முன்பு சீரான குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மணப்பாறை நகராட்சி பகுதி முத்தன் தெரு பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதிக்கு கடந்த சில மாதமாக 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அதுவும் அரை மணி நேரம் மட்டுமே குடிநீர் கிடைப்பதால் கடும் தட்டுப்பாடு நிலவி வந்துள்ளது.

இதனை கண்டித்து, நேற்று மாலை முத்தன் தெரு பெண்கள் காலி குடங்களுடன் பஸ் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். பஸ் நிலைய பகுதியிலிருந்து வெளியே வரும் பேருந்துகள் சாலையில் செல்லாதவாறு காலி குடங்களை முன்வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

தகவலறிந்து விரைந்து வந்த மணப்பாறை நகராட்சி ஆணையர்(பொ)செந்தில் உள்பட நகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories: