×

அகரம், கொந்தகையில் வீடியோ எடுக்கும் பணி தொடர்கிறது கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு நிறைவு

*குழிகள் தார்ப்பாய்களால் மூடல்

திருப்புவனம் : கீழடியில் நடந்து வந்த 7ம் கட்ட அகழாய்வு பணிகள் முடிவடைந்து விட்டன. இதனால் குழிகள் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளன. அகரம், கொந்தகையில் வீடியோ, புகைப்படம் எடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 தளங்களிலும் கடந்த பிப். 13ம் தேதி 7ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கின. கொராேனா பரவல் காரணமாக சில நாட்கள் பணிகள் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது. மணலூரில் எதிர்பார்த்த அளவு பொருட்கள் கிடைக்காததால் பணிகள் நிறுத்தப்பட்டன.

கீழடி, அகரம், கொந்தகையில் மட்டும் தொடர்ந்து நடந்து வந்தது. செப்டம்பர் கடைசி வரை பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பெரும்பாலான பணிகள் முடிவடைந்து விட்டன. எனவே 3 தளங்களையும் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
கீழடியில் வீடியோ, புகைப்படம் எடுக்கும் பணிகள் முடிந்து விட்டதால் அகழாய்வு தளங்களில் உள்ள 8 குழிகளும் தார்ப்பாய் வைத்து மூடப்பட்டுள்ளன. அகரத்தில் வீடியோ எடுக்கும் பணி முடிவடையவில்லை. ஆனால் மழை காரணமாக குழிகள் அனைத்தும் தார்ப்பாய் வைத்து மூடப்பட்டுள்ளன.

கொந்தகையில் நேற்று மாலை வீடியோ, புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற்றது. காரைக்குடியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், ‘‘2,600 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் வாழ்ந்த இடம், பொருட்களை காண ஆவலுடன் வந்தேன். குழிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அரசு திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணியை விரைவுபடுத்தினால் பண்டைய கால மக்கள் பயன்படுத்திய இடங்கள், பொருட்களை காணலாம்’’ என்றார்.

4,000க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுப்பு


தொல்லியல் அலுவலர்கள் கூறுகையில், ‘‘கீழடி, அகரம், கொந்தகை ஆகிய மூன்று தளங்களிலும் தலா 8 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து முடிந்துள்ளன. மூன்று தளங்களிலும் உறைகிணறுகள், வெள்ளி முத்திரை நாணயம், மூடியுடன் கூடிய பானை, சிவப்பு நிற பானை, தாழிகள், பொம்மைகள் உள்பட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. தொடர்ந்து மழை பெய்வதால் குழிகளை தார்ப்பாய் போட்டு மூடி வைத்துள்ளோம். பொதுப்பணித்துறை சார்பில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன. அதுவரை குழிகள் தார்ப்பாய் கொண்டே மூடப்பட்டு இருக்கும்’’ என்றனர்.

Tags : Kondagai , Keeladi, Garam, Konthagai,
× RELATED கொந்தகை அகழாய்வில் 9 முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு