×

நாங்குநேரி, கங்கைகொண்டான், தூத்துக்குடியில் அமைகிறது தென் மாவட்டங்களில் ரூ.915 கோடியில் புதிய தொழிற்சாலைகள்

*7 ஆயிரத்து 300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்

நெல்லை : நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில்  ரூ.915 கோடியில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என நம்பப்படுகிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்கள் தொழில் வளர்ச்சியில் பின் தங்கிய நிலையில் உள்ளன.

இதனால் இங்கு படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பிற்காக பெங்களுரூ, சென்னை போன்ற இடங்களுக்கு இடம் பெயர வேண்டியுள்ளது. இதை கருத்தில் கொண்டு நாங்குநேரி உயர் தொழில்நுட்ப பூங்கா திட்டம் கடந்த 1999ம் ஆண்டு மறைந்த கலைஞர் முதல்வராக இருந்த போது மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனால் கொண்டு வரப்பட்டது. இதற்காக அங்கு 2 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. பின்னர் நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்பட்டது.

 ஆனால் அடுத்து ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.  இதே போல கடந்த 2006ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது தென் மாவட்டங்களில் தொழில், வேலைவாய்ப்பை ஏற்படுத்த எல்காட் நிறுவனம் சார்பில் பொறியியல் கல்லூரி வளாகங்களில் தொழில் நிறுவனங்களை அழைத்து வந்து கண்காட்சி நடத்தப்பட்டது. அப்போது நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் படித்த இளைஞர்களின் மனித வளம், சாலை வசதி, தூத்துக்குடி விமான நிலையம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கங்கைகொண்டானில் எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட்டது.

 2011ல் திறக்கப்பட்ட இந்த தகவல் தொழில்நுட்ப பூங்கா பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் கடந்த மே மாதம் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் தொழில் வளத்தை ஏற்படுத்தவும், தென் மாவட்டங்களில் படித்த இளைஞர்கள் உள்ளூரில் வேலைவாய்ப்பு பெறவும் முதலீட்டாளர்கள், தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து வருகிறார்.

அந்த வகையில் நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் ரூ.425 கோடியில் ராமராஜூ சர்ஜிக்கல் நிறுவனம் சார்பில் ஜவுளி உற்பத்தி அமைக்கப்பட புரிந்துணர்வு ஒப்பபந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு 1,600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என நம்பப்படுகிறது. இதேபோல நெல்லை மாவட்டத்தில் கனம் லக்டெக்ஸ் நிறுவனத்தின் சார்பில் மருத்துவ துறைக்கு பயன்படுத்தும் வகையில் லக்டெக்ஸ் கையுறைகள் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த நிறுவனம் நாங்குநேரியில் தொழில் தொடங்க உள்ளது. இந்த நிறுவனம் சார்பில் ரூ.310 கோடி முதலீடு செய்யப்படுகிறது. இதன் மூலம் 1,600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.

இது தவிர நாங்குநேரியில் ரூ.50 கோடியில் ஐசக் பாய்லர் லிமிடெட் நிறுவனம் சார்பில் தொழிற்சாலைகளுக்கு தேவையான பாய்லர் எனப்படும் கொதிகலன் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இதன் மூலம் 100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என நம்பப்படுகிறது. மேலும் தூத்துக்குடியில் ஏற்கெனவே தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியபடி, தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் யுசி வேல்ட் ஆன் லைன் லிமிடெட் நிறுவனம் சார்பில் ஜவுளி தொழில் பூங்கா ரூ.130 கோடியில் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தூத்துக்குடி புதியம்புத்தூர் குட்டி திருப்பூர் என அழைக்கப்படுகிறது. இங்கு ஒவ்வொரு வீட்டிலும் ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு நடக்கிறது. தூத்துக்குடியில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் போது புதியம்புத்தூரில் தொழில் பெருகும் வாய்ப்பு ஏற்படும்.

இதன் மூலம் மறைமுக வேலைவாய்ப்புகளும் பெருகும். ஜவுளி தொழிலுக்காக இதுவரை திருப்பூர், ஈரோடு, கரூர் போன்ற வெளி மாவட்டங்களை மட்டுமே நம்பியிருந்த நிலையில், தற்போது நெல்லை, தூத்துக்குடியில் ஜவுளி தொழில் தொடங்குவதன் மூலம்  புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  
இந்த 4 நிறுவனங்களும் நெல்லை, தூத்துக்குடியில் விரைவில் தொழில் தொடங்க உள்ளன. இதன் மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் ரூ.915 கோடி முதலீடு செய்யப்படுகிறது.

இதன் மூலம்  தென் மாவட்டங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என நம்பப்படுகிறது.  இதுகுறித்து நெல்லை மாவட்ட தொழில் வர்த்தக சங்க செயலாளர் சஞ்சய் குணசிங் கூறுகையில், தமிழகஅரசின்  புதிய தொழில்கொள்கை நடவடிக்கையால் தென்மாவட்டங்களில் தொழில்வளம் அதிவேகமாக  பெருகவாய்ப்புள்ளது. கோட்டையத்தை சேர்ந்த நிறுவனம் நாங்குநேரியிலும்,  வள்ளியூர் பகுதியிலும் மருத்துவப் பணிக்கு தேவையான ரப்பர் கையுறைகள்  தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க கடந்த 3 ஆண்டுகளாக முயற்சித்தனர். இதற்கு  தற்போது திமுக அரசு முழு அனுமதியை கொடுத்து பச்சைகொடி காட்டியுள்ளது.

இதன்  மூலம் ஆயிரத்து 600 பேருக்கு நேரடியாகவும், மேலும் ஆயிரம் பேர் மறைமுகமாகவும்  வேவைாய்ப்பு பெறுவார்கள். கங்கைகொண்டானில் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் தொடங்க  அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆயிரத்து 600 பேர் நேரடி  வேலைவாய்ப்பு பெற முடியும். தூத்துக்குடியில் டெக்ஸ்டைல் பார்க் அமைக்கப்பட உள்ளது. பல்வேறு தொழில் நிறுவனங்கள் அடுத்தடுத்து வர உள்ளதால்  தென் மாவட்டத்தில் தொழில் வளம் பெருகும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார்.


Tags : Nanguneri ,Gangaikondan ,Thoothukudi , Tirunelveli, SIPCOT, Thoothukudi, New Companies
× RELATED “ராபர்ட் ப்ரூஸுக்கு அர்ப்பணிப்புடன்...