×

கூடலூர் அருகே மாடுகளை அடித்து கொல்லும் புலியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது

*கேமரா பொருத்தும் பணி தீவிரம்

கூடலூர் :  கூடலூர் அருகே பசு மாடுகளை அடித்து கொல்லும் புலியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணித்து வருகின்றனர்.  நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் கடந்த இரண்டு மாதமாக 20க்கும் மேற்பட்ட மாடுகளை புலி அடித்து கொன்றுள்ளது.
இந்த புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று முன்தினம் ஊட்டி கூடலூர் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 6 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து, மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், புலியை பிடிக்க கூண்டு வைக்கப்படும் என உறுதி அளித்தார். அதன்படி, நேற்று அதிகாலை மண் வயலை அடுத்த அம்பலமூலா பகுதியில் ராஜீ என்பவரின் மாட்டை, புலி தாக்கிய பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் புலி தாக்கி இறந்த கன்றின் உடலையும் கூண்டில் வைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.இதைத்தொடர்ந்து, புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க கேமரா பொருத்தும் பணிகளும் நடந்து வருகிறது.

வனப்பகுதியில் இருந்து கிராமங்களுக்குள் புகுந்து வீடுகளை இடித்து விளை நிலங்களை சேதப்படுத்தி வரும் விநாயகன் யானையை ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். ஏச்சம்வயல் கிராம பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் இருந்து ட்ரோன் கேமரா மூலம் யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்த விநாயகன் யானை நெல்லிக்கரை கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் இருப்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர்.

யானை அகழியைக் கடந்து ஊருக்குள் வரும் பகுதிகளில் கும்கி யானைகளை நிறுத்தி யானை ஊருக்குள் வராமல் தடுக்கும் பணி நடந்து வருகிறது. விநாயகன் யானை பிடிக்க இன்று முதுமலையில் இருந்து 2 கும்கி யானைகள் ஏச்சம் வயல் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags : Cuddalore , Cuddalore,Tiger, Cow, SteelCage, CCTV
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!