திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட்டுகளை பெற குவிந்த பக்தர்கள்: டிக்கெட் கிடைக்காததால் மக்கள் சாலை மறியல்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்திற்காக தமிழ்நாட்டை சேர்ந்த பக்தர்கள் உட்பட ஏராளமானோர் குவிந்ததால் டிக்கெட் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனை கண்டித்து மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பதியில் சாமி தரிசனம் செய்வதற்காக கடந்த திங்கட்கிழமை இரவு முதல் தினம்தோறும் 8 ஆயிரம் டிக்கெட்கள் சீனிவாச பக்தர்கள் ஓய்வறையில் வழங்கப்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்த டிக்கெட்டுகளை பெறுவதற்காக தினம் தோறும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தபடி இருந்தனர். கூட்டம் சேருவதை தவிர்ப்பதற்காக தேவஸ்தான அதிகாரிகள் அடுத்தடுத்த நாட்களுக்கான தரிசன டிக்கெட்டுகளை வழங்கி வந்தனர். 25ஆம் தேதி வரை டிக்கெட்டுகள் வழங்கப்பட்ட நிலையிலும் கூட்டம் குறையவில்லை. இதனால் நேரடியாக டிக்கெட் கொடுப்பதை நிறுத்திய அதிகாரிகள் ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்து கொள்ளுமாறு ஒலிப்பெருக்கியில் அறிவித்தனர். ஆனாலும் பக்தர்கள் அந்த இடத்தை விட்டு நகராமல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பதியில் தரிசனம் செய்வதற்காக தமிழ்நாட்டில் இருந்து சென்ற ஏராளமான பக்தர்களுக்கு டிக்கெட் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர். இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று முதல் வெளியிடப்பட்டு 26ஆம் தேதி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories:

More