ஒரு வாரத்தில் அமைக்கப்படும் பெகாசஸ் ஒட்டு கேட்பு பற்றி விசாரணை நடத்த நிபுணர் குழு: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரின் செல்போன்கள் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலமாக ஒட்டு கேட்கப்பட்ட விவகாரம் பற்றி நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்து விரிவான விசாரணை நடத்தப் போவதாக உச்ச நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது. இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலமாக, இந்தியாவில் பத்திரிகையாளர்கள், ஒன்றிய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், தேர்தல் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 300 பேரின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக, சில மாதங்களுக்கு முன்பாக சர்வதேச நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன. இதனால், இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இப்பிரச்னை பற்றி நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்தும்படி கோரி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முழுவதையும் எதிர்க்கட்சிகள் அமளி செய்து முடக்கின.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்த உத்தரவிடும்படி கோரி, உச்ச நீதிமன்றத்தில பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதில், ‘நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டு இருப்பதால், பெகாசஸ் விவகாரம் பற்றி விரிவான பிரமாண பத்திரத்தை  தாக்கல் செய்ய முடியாது,’ என கடந்த விசாரணையின்போது ஒன்றிய அரசு தெரிவித்தது. இதை நிராகரித்த நீதிபதிகள், ‘விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யாவிட்டால், உச்ச நீதிம்னறமே ஒரு இடைக்கால தீர்ப்பை வழங்கும்,’ என கடந்த 13ம் தேதி எச்சரித்தது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி என்வி.ரமணா கூறுகையில், ‘பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் பற்றி தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு விரிவாக விசாரணை நடத்தப்படும். இந்த குழுவில் இடம் பெற உள்ள சில நிபுணர்களிடம் பேசப்பட்டு வருகிறது. அவர்களில் சிலர் தயக்கம் காட்டி வருகின்றனர். அதனால், அவகாசம் தேவைப்படுகிறது. அதனால், இந்த விவகாரம் தொடர்பாக சுதந்திரமான நிபுணர் குழுவை அமைப்பது தொடர்பாக ஒரு வாரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும்,’ என தெரிவித்தார்.

பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் பற்றி நிபுணர் குழுவை அமைத்து விசாரணை நடத்த தயாராக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே ஒன்றிய அரசு தெரிவித்து இருந்தது. அப்போது அதற்கு, வழக்கு தொடர்ந்துள்ள காங்கிரஸ் உள்ளிட்ட மனுதாரர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>