×

திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமானது திருமண மண்டபமாக மாறிய தர்ம சத்திரம்: அதிரடியாக மீட்ட அதிகாரிகள்

திருப்போரூர்: திருப்போரூரில் 8 கோடி மதிப்புள்ள அறக்கட்டளை சத்திரத்தை, சிலர் திருமண மண்டபமாக மாற்றினர். அதனை கண்டுபிடித்து அதிகாரிகள் மீட்டனர்.சென்னை புறநகர் பகுதியான திருப்போரூரில் புகழ் பெற்ற கந்தசுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் உள்ள நான்கு மாடவீதிகள் மற்றும் அதையொட்டி உள்ள சான்றோர் வீதி, திருவஞ்சாவடி தெரு, பழைய மாமல்லபுரம் சாலை ஆகிய இடங்களில் பல்வேறு சமூகத்தினருக்கு சொந்தமான 64 சத்திரங்கள் இருந்தன. இந்த சத்திரங்களில் பொதுமக்கள் வந்து தங்கவும், ஆண்டுதோறும் கோயிலில் ஒருநாள் சிறப்பு அபிஷேகம், பூஜை செய்யவும், கோயிலுக்கு தினசரி எண்ணெய், பால் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டளைகள் விதித்து உயில் சாசனம், சிலா சாசனம், பட்டயம் ஆகியவை எழுதி வைக்கப்பட்டுள்ளன.

தற்போது, ஒரு சில சத்திரங்களை நிர்வகிக்கும் அறக்கட்டளைதாரர்கள் மட்டும் இப்பணியை தவறாது செய்கின்றனர். பல சத்திரங்கள் இடிந்து விட்டதாலும், அதை நிர்வகித்து வந்த நிர்வாகிகள் இறந்து விட்டதாலும் ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டுள்ளது.இதையொட்டி, திருப்போரூர் தெற்கு மாடவீதியில் சென்னை வாணியர் தர்ம பரிபாலன சத்திரம் அறக்கட்டளைக்கு சொந்தமான 6 கிரவுண்ட் நிலம், சத்திரம் ஆகியவையும், சென்னை பெத்தநாயக்கன் பேட்டையில் இருக்கும் மற்றொரு சொத்தையும் அறக்கட்டளை உருவாக்கி நிர்வகித்து வர கடந்த 1932ம் ஆண்டு சிலா சாசனம் எழுதி கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த உயில் சாசனமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து,  கடந்த சில ஆண்டுகளாக தற்போதுள்ள அறக்கட்டளை நிர்வாகத்தினர் உயில் சாசனத்தில் உள்ள நிபந்தனைகளை மீறி சென்னையில் இருந்த சொத்தையும், திருப்போரூரில் இருந்த சொத்துக்களில் ஒரு பகுதியையும் விற்பனை செய்துள்ளனர். மேலும், தர்ம சத்திரத்தை திருமண மண்டபமாக மாற்றியுள்ளனர் என சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து திருப்போரூர் கந்தசுவாமி கோயில் நிர்வாகம் சார்பில், கட்டளை விதிகளை மீறியது குறித்து அறக்கட்டளை நிர்வாகத்தினருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டது. அதில், சம்பந்தப்பட்ட அறக்கட்டளை நிர்வாகம் அளித்த விளக்கம் திருப்தியாக இல்லை. இதைதொடர்ந்து, திருப்போரூர் தெற்கு மாடவீதியில் உள்ள அறக்கட்டளை தர்ம சத்திரத்தை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்த முடிவு செய்தது. இந்நிலையில், திருப்போரூர் கந்தசுவாமி கோயில் செயல் அலுவலர் சக்திவேல், திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோயில் செயல் அலுவலர் வெங்கடேசன், அறநிலையத்துறை ஆய்வாளர் சிவகாமி, திருப்போரூர் வருவாய் ஆய்வாளர் புஷ்பராணி, விஏஓ ஆகியோர் முன்னிலையில் அரசின் உத்தரவு நோட்டீஸ் ஒட்டப்பட்டு 14,436 சதுரஅடி உள்ள மனை, அதில் இருந்த சத்திரம் ஆகியவை கையகப்படுத்தி சுவாதீனப்படுத்தப்பட்டது. இந்த திருமண மண்டபத்தில் திருமணம் நடத்த முன்பணம் செலுத்தியவர்கள் தொடர்ந்து திருமணம் நடத்தி கொள்ளலாம் என கோயில் செயல் அலுவலர் சக்திவேல் தெரிவித்தார். அந்த வகையில், கையகப்படுத்தப்பட்ட தர்ம சத்திரம் மற்றும் சொத்துக்களின் இன்றைய மதிப்பு ₹8 கோடி  என கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



Tags : Dharma shram ,Kandaswami Temple ,Tiruporur , Thiruporur belongs to the Kandaswamy Temple Dharma Chattram turned into a wedding hall: Officers recover it in a hurry
× RELATED திருப்போரூர் திறந்தநிலையில் கந்தசாமி...