மதுராந்தகம் அருகே பரபரப்பு அரசு நிலத்தில் கட்டிய வீடுகள் அகற்றம்: அதிகாரிகளை கண்டித்து ஆசாமி தீக்குளிக்க முயற்சி

செய்யூர்: மதுராந்தகம் அருகே அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து கட்டி இருந்த வீடுகளை அதிகாரிகள் அகற்ற சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி, ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மதுராந்தகம் அடுத்த தேவாதூர் கிராம சாலையோரத்தில், அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன், செல்வதுரை,  ராஜம் ஆகியோர் அந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, சுமார் 25 ஆண்டுகளாக வீடு கட்டி வசிக்கின்றனர். இந்த வீட்டுக்கு அருகே, சண்முகம் என்பவருக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த விவசாய நிலத்திற்கு செல்லும் பாதையை, அவர்கள் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதாக, கடந்த 2019ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற, வருவாய்த்துறைக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், மதுராந்தகம் வட்டாட்சியர் நடராஜன் தலைமையில், நீதிமன்ற உத்தரவுபடி, வருவாய் துறை, தீயணைப்பு, காவல் ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகள், வீடுகளை அகற்ற மேற்கண்ட பகுதிக்கு சென்றனர். அப்போது, செல்வதுரை என்பவர், அதிகாரிகளை தடுத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனாலும் அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டும் என அவர்களிடம் கூறினர். அந்த நேரத்தில் செல்லதுரை, மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை, தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்ததும், அங்கிருந்த  போலீசார், தீயணைப்பு துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இச்சம்பவத்தால், அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

More
>