மனு கொடுக்க சென்ற திமுக எம்பி.க்களுக்கு அவமதிப்பு தமிழக மாஜி தலைமை செயலாளரிடம் நாடாளுமன்ற உரிமைக்குழு விசாரணை: ஒரு மணி நேரம் சரமாரி கேள்வி

புதுடெல்லி: மக்கள் பிரச்னை குறித்து மனு கொடுக்க சென்ற திமுக எம்பிக்கள் குழுவை அவமதித்தது தொடர்பாக தமிழக முன்னாள் தலைமை செயலாளர் சண்முகத்திடம், நாடாளுமன்ற உரிமைக்குழு ஒரு மணி நேரம் விசாரணை நடத்தியது.தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடந்தபோது கடந்தாண்டு மே 13ம் தேதி திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு, எம்பி.க்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்க பாண்டியன் ஆகியோர் அடங்கிய குழு, அப்போதைய தலைமை செயலாளர் சண்முகத்திடம் பொதுமக்கள் தொடர்பான கோரிக்கை மனு அளிக்க சென்றது. அவர்களை அவமதிக்கும் வகையில், சண்முகம் டிவி பார்த்துக் கொண்டு இருந்தார். தாங்கள் வந்துள்ள நோக்கம் பற்றி எம்பி.க்கள் கூற முயன்றபோது, ‘மனு கொடுத்துள்ளீர்களே... பார்கிறோம்...’ என அலட்சியமாக தெரிவித்தார்.

இது பற்றி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு திமுக எம்பி.க்கள் எழுதிய கடிதத்தில், ‘கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக திமுக சார்பில் தொடங்கப்பட்ட ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தின் மூலம் மக்களிடம் இருந்து 15 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன. அதில் 14 லட்சம் பேருக்கு தேவையான உதவியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகள் வழங்கினர். மீதமுள்ள ஒரு லட்சம் மனுக்களுக்கு அரசுத் துறைகள் மூலம்தான் தீர்வு காணப்பட வேண்டும் என்பதால், அந்த மனுக்களை தமிழக அரசு தலைமை செயலாளரிடம் ஒப்படைக்க சென்றோம். ஆனால், அவர் எங்களிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டார். குறைந்தபட்ச வரவேற்பு முறைகளை கூட பின்பற்றவில்லை.

அவர் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று கூறப்பட்டது.இதன் பேரில், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி முன்னாள் தலைமை செயலாளர் சண்முகத்துக்கு நாடாளுமன்ற உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி, இந்த குழுவின் முன்னிலையில்  சண்முகம் நேற்று ஆஜரானார். குழுவின் தலைவர் சுனில் குமார் சிங் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்டார். இந்த விசாரணை ஒரு மணி நேரம் நடந்தது.

Related Stories:

More
>