×

டாஸ்மாக் கடைகளில் மொத்த விற்பனை செய்தால் நடவடிக்கை: பணியாளர்களுக்கு நிர்வாகம் எச்சரிக்கை

சென்னை: டாஸ்மாக் கடைகளில் மொத்த விற்பனை செய்யும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணியன் வெளியிட்ட சுற்றறிக்கை: டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மதுபானங்கள் நுகர்வோருக்கு விற்பனை செய்யும் போது மொத்தமாக விற்பனை செய்தல் கூடாது எனறும், ஒரு தனி நபருக்கு அனுமதிக்கப்பட்ட அளவுகளிலேயே விற்பனை செய்ய வேண்டுமென பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களின் ஆய்வுக்கூட்டங்களிலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் குற்றவியல் வழக்கு ஒன்றில், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மதுபான சில்லறை விற்பனை கடைகளிலிருந்து மொத்தமாக மதுபானங்களை வாங்கி விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவர்களுக்கு மொத்தமாக விற்பனை செய்யும் டாஸ்மாக் மதுபான விற்பனையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

எனவே, அனைத்து மாவட்ட மேலாளர்களும், மதுபான சில்லறை விற்பனைக் கடைகளிலிருந்து மதுபானங்களை மொத்தமாக விற்பனை செய்தல் கூடாது என்பதை தத்தம் மாவட்ட கடை பணியாளர்களின் ஆய்வுக்கூட்டம் நடத்தி, இப்பொருள் குறித்து விளக்கமாக தெரிவித்து அனைத்து பணியாளர்களிடமும் சான்றொப்பம் பெற்றிட அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு மொத்தமாக விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இதனை அனைத்து மாவட்ட மேலாளர்களும் தவறாது கண்காணித்து எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் விற்பனை செய்திட அனைத்து பணியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

* ரசீது கட்டாயம்
மதுபானம் விலைப்பட்டியலை டாஸ்மாக் கடைகளில் வாடிக்கையாளர்கள் பார்வையில் படும்படி வைக்க வேண்டும். மதுபானம் வாங்குவோருக்கு ரசீது கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும். தவறினால் சம்பந்தப்பட்ட கடைப்பணியாளர்கள் மீது துறைரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Tasmac , Action if bulk sales at Tasmac stores: Management warns employees
× RELATED 3 நாட்களுக்கு பிறகு திறப்பு டாஸ்மாக் மதுக்கடைகளில் குவிந்த மதுபிரியர்கள்