×

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் 50 ஆயிரம் அரசு கட்டிடங்களில் ஆய்வு: பொதுப்பணித்துறை உத்தரவு

சென்னை: தமிழகத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் சிறியதும், பெரியதுமாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு கட்டிடங்கள் உள்ளது. இதை பொதுப்பணித்துறை பராமரிக்கிறது. இந்த நிலையில் அக்டோபர் மாதத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கட்டிடங்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் விஸ்வநாதன் அனைத்து பொறியாளர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கீழ் உள்ள உதவிபொறியாளர், இளநிலை பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசு கட்டிடங்களை கள ஆய்வு செய்ய வேண்டும்.

அப்போது, அரசு கட்டிடங்களின் மேற்கூரைகள் வலுவாக இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டிடங்களில் மழை நீர் எளிதாக செல்கிறதா என்பதை பார்க்க வேண்டும். அரசு கட்டிடங்களில் வைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டர் தண்ணீர் தேங்காத உயரத்தில் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் ஐசியு, சிசியு வார்டுகளில் 24 மணி நேரம் மின்சாரம் தரும் வகையில் வசதி உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இதன் விவரங்களை புகைப்படத்துடன் விரிவான அறிக்கையாக அனைத்து செயற்பொறியாளர்களும் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : Study on 50,000 government buildings ahead of the onset of the northeast monsoon: Public Works Department order
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...