சட்ட விரோதமாக 60 நிறுவனங்களுக்கு தடையில்லா சான்று தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஏ.வி.வெங்கடாசலம் வீடு, அலுவலகத்தில் சோதனை

* ரூ.15 லட்சம் பணம், பல கோடியிலான தங்கம், சொத்து ஆவணங்கள் பறிமுதல்

* ஓய்வு பெறும் நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை

* 5 இடங்களில் ரெய்டு

சென்னை: சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, அவசர அவசரமாக ஒரே மாதத்தில் 60 நிறுவனங்களுக்கு தடையில்லா சான்று வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததை தொடர்ந்து, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வீடு, அலுவலகம் என் 5 இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.15 லட்சம் , 8 கிலோ தங்கம், சந்தன மரத் துண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை கிண்டியை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இயங்கி வருகிறது. தமிழகத்தில் தொழில் மற்றும் புதிய கட்டிடங்கள் கட்ட  மற்றும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி கட்டாயம்.

இதனால், தொழிலதிபர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள் தங்கள்  தொழிலை தடையின்றி செய்ய, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு பல கோடி ரூபாய் வரை லஞ்சம் கொடுத்து தடையில்லா சான்று பெறுகின்றனர். இந்த முறைகேடு அதிமுக ஆட்சியில் அதிகளவில் நடந்துள்ளது. அதற்கு உதாரணமாக வேலூர், சென்னையில் சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய கண்காணிப்பாளர் பாண்டியன் உட்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகள் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் பல கோடி மதிப்புள்ள பணம், கிலோ கணக்கில் தங்கம், பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக ஏ.வி.வெங்கடாசலம் பணியாற்றி வருகிறார். இவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர். கடந்த 1983ம் ஆண்டு யுபிஎஸ் தேர்வு எழுதி ஐஎப்எஸ் அதிகாரியாக தேர்வானார். இந்தியாவில், பல இடங்களில் வனத்துறை அதிகாரியாக இருந்துள்ளார். ஐஎப்எஸ் அதிகாரியான இவர், கடந்த 2019ம் ஆண்டு ஓய்வு பெற்றார். பின்னர், அதிமுக ஆட்சியில் வெங்கடாசலத்துக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக பதவி வழங்கப்பட்டது. ஓராண்டுக்கு நியமிக்கப்பட்ட அவர், அதிமுக அமைச்சர்களுடன் நெருங்கிய தொடர்பில்  இருந்ததால் மீண்டு ஏ.வி.வெங்கடாசலத்திற்கு ஓராண்டு பதவி நீட்டிக்கப்பட்டது.

தமிழக சட்டப் பேரவை தேர்தலுக்கு முன்பாக ஏப்ரல் மாதம் மட்டும் அவசர அவசரமாக 60 நிறுவனங்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடையில்லா சான்று வழங்கியுள்ளது. வழக்கமாக ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 20 நிறுவனங்களுக்கு தான் வாரியம் சார்பில் தடையில்லா சான்று வழங்குவது வழக்கம். ஆனால் சட்டத்துக்கு புறம்பாக விதிகளை மீறி 3 மடங்கு அதாவது 60 நிறுவனங்களுக்கு ஏ.வி.வெங்கடாசலம் தலைமையிலான மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடையில்லா சான்று வழங்கியது. இதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்து இருப்பதாக அப்போதே குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உரிய ஆதாரங்களுடன் தொடர் புகார்கள் வந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக உள்ள ஏ.வி.வெங்கடாசலத்தின் பதவி வரும் 27ம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்காக கடந்த ஒரு வாரமாக தொழில் நிறுவன உரிமையாளர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், தோல் தொழிற்சாலை அதிகாரிகள் பலர் கடந்த ஒரு வாரமாக ஏ.வி.வெங்கடாசலத்தை அவரது அலுவலகத்திற்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்து பல பரிசு பொருட்கள் அன்பளிப்பாக வழங்கிவிட்டு சென்று வருகின்றனர். அந்த வகையில் நேற்று அவரது அலுவலகத்தில் தொழிலதிபர்கள் பலர் வந்து வாழ்த்து தெரிவித்து கொண்டிருந்தனர்.

அப்போது சட்டவிரோதமாக தடையில்லா சான்று கொடுத்த விவகாரம் தொடர்பான புகாரின் படி, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஒரே நேரத்தில் ஏ.வி.வெங்கடாசலத்தின் கிண்டியில் உள்ள தலைமை அலுவலகம், வேளச்சேரில் உள்ள வீடு, சேலம் ஆத்தூரில் உள்ள வீடு என 5 க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்து கணக்கில் வராத ரூ.15 லட்சம் கட்டுக்கட்டாக ரொக்க பணம், 8 கிலோ தங்க நகைகள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், 10 கிலோ சந்தன மரத்தாலான பொருட்கள், சந்தன கட்டைகள், வங்கி லாக்கர் சாவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கணக்காய்வு செய்து வருகின்றனர். அந்த ஆய்வுக்கு பிறகு தான் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தலைவராக இருந்து 2 ஆண்டுகளில் அவரது வருமானத்துக்கு மீறி எவ்வளவு சொத்துக்கள் சேர்த்துள்ளார் என்பது குறித்து தெரியவரும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் நரேந்திரன் தலைமையிலான குழுவினர், நேற்று மதியம் ஆத்தூர் அம்மம்பாளையம் தேரடி வீதியில், வெங்கடாசலத்துக்கு சொந்தமான பூர்வீக வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

Related Stories:

More