காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவி நடுரோட்டில் குத்தி கொலை: தாம்பரத்தில் இளைஞர் வெறிச் செயல்

சென்னை: தாம்பரத்தில் தனியார் கல்லூரி மாணவியை அவரது காதலன் கத்தியால் குத்தி கொலை செய்து, தானும் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 கல்லூரி மாணவி சுவாதி, கடந்த 2016ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி தந்தையுடன் ரயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது, மறைத்து  வைத்திருந்த அரிவாளை எடுத்து அவரது வாயில் ஒரு இளைஞர் வெட்டியதால்,  ரத்த வெள்ளத்தில் சரிந்த சுவாதி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதேபோல தாம்பரத்தில் நேற்று ஒரு கொலை நடந்தது. தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை, பாரதிபுரம், ரவி தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவர் மாநகரப் பேருந்து ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். இவரது மகள் ஸ்வேதா (21). சேலையூர் அகரம்தென் பிரதான சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு மைக்ரோபயாலஜி படித்து வந்தார். அதோடு, கிழக்கு தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரியில் லேப் டெக்னீசியன் டிப்ளமோ கோர்சும் படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று மதியம் 2 மணிக்கு ஸ்வேதா, தனது தோழி சங்கீதாவுடன் ரயிலில் குரோம்பேட்டையில் இருந்து தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்து பின்னர் அங்கிருந்து கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, ரயில்வே குடியிருப்பு பகுதி அருகே வந்தபோது, அங்கு வந்த வாலிபர் ஒருவருடன் ஸ்வேதா பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த வாலிபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஸ்வேதாவின் கழுத்தில் ஓங்கி குத்தினார். இதனால் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு ஸ்வேதா சம்பவ இடத்திலேயே இறந்தார். இதை நேரில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஸ்வேதாவுடன் வந்த சங்கீதா இதை பார்த்து அதிர்ச்சியில் அலறினார்.

அங்கிருந்த பொதுமக்கள் அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். பொதுமக்கள் திரண்டு நின்றதை பார்த்த அந்த வாலிபர் உடனே தான் வைத்திருந்த கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு வந்த சேலையூர் போலீசார் வாலிபரை பிடித்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஸ்வேதாவை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, ஸ்வேதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து பிடிபட்ட அந்த வாலிபரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு கழுத்தில் 9 தையல் போடப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, வழக்கு பதிவு செய்த சேலையூர் போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணையில் அந்த வாலிபர் தெரிவித்த தகவல்கள் வருமாறு: திருக்குவளை ஆதமங்களம் பகுதியை சேர்ந்தவன். பெயர் ராமச்சந்திரன்(24). 2019ம் ஆண்டு சென்னையிலிருந்து மயிலாடுதுறையில் உள்ள உறவினரை சந்திப்பதற்காக ரயிலில் சென்று கொண்டிருந்தபோது, ஸ்வேதா பழக்கமானார். எங்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியது. பொறியியல் படிப்பை முடித்த பின்னர், மறைமலை நகர் பகுதியில் அறை எடுத்து தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தேன். ஸ்வேதா கிழக்கு தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் ஒரு ஆண்டு டிப்ளமோ படிப்பான டிஎம்எல்டி படித்து வந்தார். அந்த கல்லூரியில் அவர் சேர்ந்த பின்னர், என்னிடம் பேசுவதை தவிர்த்து வந்தார்.

பிறகு, என்னை விட்டு விலகி செல்ல முயற்சி செய்து வந்தார். இதனால், ஆத்திரமடைந்த நான், ஸ்வேதாவை கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டு கடைசியாக நேரில் சந்தித்து பேச வேண்டும் எனக் கூறி வரவழைத்தேன். அப்போது கிழக்கு தாம்பரத்தில் உள்ள ரயில்வே குடியிருப்பு பகுதியில் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, என்னை விட்டு விலகி செல்ல வேண்டாமென எடுத்துக் கூறினேன். ஆனால் அவர் அதை கேட்காததால், நான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தில் குத்தி கொலை செய்து, தானும் தற்கொலை செய்துகொள்ள கழுத்தை அறுத்துக் கொண்டேன். இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். கல்லூரியில் ஸ்வேதா சேர்ந்த பின்னர், என்னிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். பிறகு, என்னை விட்டு விலகி செல்ல முயற்சி செய்து வந்தார். இதனால், ஆத்திரமடைந்த நான், ஸ்வேதாவை கொலை செய்தேன்.

Related Stories:

More
>