தமிழகத்தில் காலியான 2 மாநிலங்களவை எம்பி பதவிக்கு திமுக வேட்பாளர்கள் கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் தேர்வு

சென்னை: தமிழகத்தில் காலியாக இருந்த 2 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு திமுக வேட்பாளர்கள் கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்தில் காலியாக இருந்த 2 மாநிலங்களவை எம்பி இடங்களுக்கு அக்டோபர் 4ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த பதவிக்கு திமுக சார்பில் கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் ஆகியோரும், 3 சுயேச்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் நடத்தும் அதிகாரியும், தமிழக சட்டப்பேரவை செயலாளருமான சீனிவாசன் தலைமையில் நேற்று நடந்தது.

அதில், சுயேச்சை வேட்பாளர்கள் அக்னி ஸ்ரீராமச்சந்திரன், பத்மராஜன், புஷ்பராஜ் ஆகியோரது மனுக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் முன்மொழியாததால் தள்ளுபடி செய்யப்பட்டது. திமுக சார்பில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்த கனிமொழி சோமு மற்றும் ராஜேஷ்குமார்  ஆகியோரது வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.  இதையடுத்து திமுக வேட்பாளர்கள் கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் ஆகிய இருவரும் போட்டியின்றி மாநிலங்களவை எம்பி பதவிக்கு தேர்வாகி உள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிற 27ம் தேதி (திங்கள்) மாலை 3 மணிக்கு அறிவிக்கப்பட்டு, தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.

Related Stories: