×

ஆப்கானில் புதிய அரசை அமைப்பது குறித்து தலிபான்களுடன் ரஷ்யா, சீன, பாக். தூதர்கள் சந்திப்பு: முன்னாள் பிரதமரிடம் முக்கிய ஆலோசனை

பீஜிங்: ஆப்கானில் புதிய அரசை அமைப்பது குறித்து தலிபான்களுடன் ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் தூதர்கள் ஆலோசனை நடத்தினர். மேலும், அந்நாட்டு முன்னாள் பிரதமரிடமும் ஆலோசனை நடத்தினர். ஆப்கானில் தலிபான் தீவிரவாதிகளின் இடைக்கால அரசு அமைக்கப்பட்ட நிலையில், ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகியவை நாடுகள் காபூலில் தங்கள் தூதரகங்களை  திறந்து வைத்துள்ளன. அதேநேரம், அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தங்கள் தூதரகங்களை  மூடிவிட்டன. இந்நிலையில், முக்கிய திருப்பமாக சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் சிறப்புத் தூதர்கள், நேற்று காபூலில் தலிபான் இடைக்கால அரசின் உயர் அதிகாரிகளை சந்தித்தனர்.

அப்போது தீவிரவாதத்தை எதிர்த்து போராடுதல், ஆப்கானின் பொருளாதார மேம்பாடு, மனிதாபிமான செயல்பாடுகள் உள்ளடக்கிய புதிய அரசை அமைப்பது குறித்து விவாதித்துள்ளனர். இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஸாவோ லிஜியான், தலைநகர் பீஜிங்கில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் மூன்று சிறப்பு தூதர்களும் கடந்த 21, 22ம் ஆகிய தேதிகளில் காபூலுக்கு சென்றனர். அங்கு, தலிபான்களின் தற்காலிக பிரதமர் முகம்மது ஹசன் அகுந்த், வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முடாகி மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.  தொடர்ந்து, சீனா, ரஷ்யா, பாகிஸ்தானின் சிறப்பு தூதர்கள் காபூலில் வசிக்கும் ஆப்கானிய தலைவர்களான ஹமீத் கர்சாய் மற்றும் அப்துல்லா அப்துல்லாவையும் சந்தித்தனர்.

இவர்களில் ஹமீத் கர்சாய் ஆப்கானின் முன்னாள் பிரதமராவார். தலிபான்கள் ஆப்கானை கைப்பற்றிய பின்னர், வெளிநாட்டு தூதர்கள் மேற்கண்ட தலைவர்களை முதல் முறையாக சந்தித்துள்ளனர். முன்னதாக, ஐ.நா.வுக்கான ஆப்கானிஸ்தானின் புதிய தூதராக சுஹைல் ஷாஹீன் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.நா-வின் முயற்சியால் இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது. தலிபான்கள் தரப்பில், ஐ.நா தலைவர் குட்டரெஸுக்கு எழுதிய கடிதத்தில், ‘நியூயார்க்கில் நடைபெற்று வரும் பொதுச் சபையின் 76வது கூட்டத்தொடரில் எங்களை பங்கேற்க அனுமதிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


Tags : Russia ,Bach ,Taliban ,Afghan , Russia, China, Pakistan join forces with Taliban to form new government in Afghanistan Ambassadors meet: Key advice to former PM
× RELATED பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வழங்கிய இந்தியா.!