×

தமிழகத்தில் ஆட்சி மாறியிருப்பதால் நியாயம் கிடைக்கும் : ஐஜி முருகனால் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்

புதுடெல்லி:ஐஜி முருகன் மீதான பாலியல் தொடர்பான வழக்கில் தமிழக காவல் துறையே விசாரிக்கலாம் என்று பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜியாக பணியாற்றிய முருகன், கடந்த 2018ம் ஆண்டு பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்து கொண்டார். இவ்விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்தது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஐஜி முருகன் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிபிசிஐடி போலீசார் பதிவு செய்துள்ள வழக்குகளை தெலங்கானா மாநில காவல்துறை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதற்காக பெண் அதிகாரி ஒருவரை விசாரணை அதிகாரியாக நியமிக்க வேண்டும். தெலங்கானா மாநில டிஜிபி கண்காணிக்க வேண்டும்.ஆறு மாத காலத்திற்குள் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஐஜி முருகன் மேல்முறையீடு செய்தார். உச்சநீதிமன்ற நீதிபதி சுபாஷ் ரெட்டி முன்பு விசாரணை நடத்தப்பட்ட நிலையில், ஐஜி முருகனுக்கு எதிரான பாலியல் வழக்கை தெலங்கானா போலீசுக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கில் தமிழக அரசும், புகார்தாரரான பெண் ஐபிஎஸ் அதிகாரியும் பதிலளிக்குமாறு உத்தரவிடப்பட்டது.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ளதால், ஐஜி முருகன் மீதான பாலியல் வழக்கை இங்கேயே (தமிழக காவல்துறை) விசாரிக்கலாம் என்று மாநில அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், ஐஜி முருகன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பெண் ஐபிஎஸ் அதிகாரி தரப்பில், ‘தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், மாநில காவல் துறையின் மீது நம்பிக்கை வைத்து இவ்வழக்கு விசாரணையை தமிழகத்திலேயே தொடர அனுமதிக்க வேண்டும். வேறு மாநிலத்தில் மாற்றக் கோரிய மனுவை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், இதுதொடர்பான பிரமாண பத்திரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பெண் ஐபிஎஸ் அதிகாரி, தமிழக காவல் துறையே ஐஜி மீதான பாலியல் புகாரை விசாரிக்கலாம் என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதால், மேல்முறையீட்டு மனு தொடர்பாக உச்சநீதிமன்றம் வரும் திங்கட்கிழமை முக்கிய உத்தரவை பிறப்பிக்க வாய்ப்புள்ளது.


Tags : Tamil Nadu ,IG ,Murugan ,Supreme Court , ஐஜி முருகன்
× RELATED தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பல...