சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இளம்பெண் கத்தியால் குத்திக்கொலை!: பட்டப்பகலில் காதலன் வெறிச்செயல்..!!

சென்னை: சென்னை தாம்பரம் ரயில் நிலையம் அருகே தனியார் கல்லூரி மாணவி பட்டப்பகலில் இளைஞரால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை குரோம்பேட்டை பாரதிபுரத்தை சேர்ந்தவர் சுவேதா. அதேபகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மெடிக்கல் லாப் டெக்னீசியன் படித்து வருவதாக கூறப்படுகிறது. சுவேதாவை ராமன் என்பவர் காதலித்து வந்ததாகவும், இருவருக்கும் இடையில் சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் இன்று தாம்பரம் ரயில் நிலையம் அருகே இருவரும் சந்தித்து பேசுகையில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

தொடர்ந்து வாக்குவாதம் முற்றியதால் ராமன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு சுவேதாவை சரமாரியாக குத்தியுள்ளார். கத்திக் குத்தில் பலத்த காயமடைந்த சுவேதா குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள் கல்லூரி மாணவியை கொன்ற ராமனை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இதற்கிடையே, போலீசாரிடம் பிடிபட்ட ராமன் கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் காயமடைந்த ராமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி சிசிடிவி காட்சிகளை காவல்துறை உயரதிகாரிகள் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அரங்கேறிய இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இளம்பெண் சுவேதாவை அவரது காதலனே கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை அதிகரித்திருக்கிறது.

Related Stories:

More
>