மோசெல் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் ஆண்டி முர்ரே, பாப்லோ கேரனோ

மெட்ஸ்: மோசெல் ஓபன் டென்னிஸ் காலிறுதிக்கு ஆண்டி முர்ரே, பாப்லோ கேரனோ மற்றும் ஹோல்கர் ருனே ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். பிரான்சின் மெட்ஸ் நகரில் மோசெல் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் முன்னாள் நம்பர் 1 வீரர் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே, கனடா வீரர் வாசேக் பாஸ்பிசில்லுடன் மோதினார். துவக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடிய முர்ரே, 6-3, 6-3 என நேர் செட்களில் பாஸ்பிசில்லை வீழ்த்தி, காலிறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் அனுபவ வீரர் பாப்லோ கேரனோவுடன், ஸ்வீடனின் இளம் வீரர் மிகேல் ஒய்மெர் மோதினார்.

இதில் முதல் செட்டை 7-5 என போராடி கைப்பற்றிய பாப்லோ, 2வது செட்டை 6-2 என எளிதாக கைப்பற்றி, ஒய்மெரை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் பாப்லோவும், காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இத்தாலியின் முன்னணி வீரர் லோரென்சோ சோனேகோவும், 18 வயதேயான டென்மார்க்கின் ஹோல்கர் ருனேவும் மோதிய காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டி, மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. முதல் செட்டை நீண்ட இழுபறிக்கு பின்னர், சோனேகோ டை பிரேக்கரில் 7-6 என கைப்பற்றினார். ஆனால் அடுத்த 2 செட்களை 6-4, 6-4 என கைப்பற்றி, சோனேகோவின் காலிறுதி கனவுக்கு ருனே முற்றுப்புள்ளி வைத்தார்.

Related Stories: