நாடாளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரையின் பல்கலை., அரசு நிலங்களை ஆக்கிரமித்துள்ளதா?: சர்வே செய்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: நாடாளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரையின் பல்கலைக்கழகம், அரசு நிலங்களை ஆக்கிரமித்துள்ளதா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. சென்னை அடுத்த கோனாம்பேடு கிராம பொதுநல சங்கத்தின் தலைவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், தங்கள் கிராம பகுதியில் தற்போது நில ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதாகவும், இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் தங்கள் கிராமத்தில் பாதாள சாக்கடை வசதி செய்யப்படவில்லை என்றும் ரேஷன் கடை, சமுதாய நலக்கூடம் என எந்தவொரு அரசு கட்டிடமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் முன்னாள் கல்வித்துறை அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரையின் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி பல்கலைக்கழகம் அருகில் கிராம நிலங்கள் மற்றும் நீர்நிலங்களை ஆக்கிரமித்து மின்சார துணைமின் நிலையம், தனியார் பாதை, மாணவர், மாணவியர் தங்கும் விடுதி ஆகியவை கட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். அதேசமயம் அருகில் உள்ள ஆவடி நகராட்சி உயர்நிலை பள்ளியில் எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த நிலத்தை மீட்டு சம்பந்தப்பட்ட அரசு பள்ளிக்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என்று கேட்டுக்கொல்லப்பட்டிருந்தது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கல்யாண சுந்தரம், நீதிபதி வி.சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அச்சமயம் பல்கலைக்கழகம் சார்பில் இந்த வழக்கு குறித்து தங்களுக்கு எந்த நோட்டீசும் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நாடாளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரையின் பல்கலைக்கழகம், அரசு நிலங்களை ஆக்கிரமித்துள்ளதா? என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு உரிய நோட்டீஸ் அளிக்கப்பட வேண்டும். அனைத்து நிலங்களையும் சர்வே மேற்கொண்டு 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

Related Stories:

More
>