‘செல்போனை கொடுக்காவிட்டால் குதித்து விடுவேன்’: அண்ணாமலையார் கோயில் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி: திருவண்ணாமலையில் பரபரப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் மீது ஏறி வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரத்தின் மீது நேற்று மதியம் வாலிபர் ஒருவர் திடீரென ஏறினார். கோபுரத்தின் மீதுள்ள செடிகளை அகற்றுவதற்கான பணியில் ஈடுபடும் ஊழியர் என அங்கிருந்தவர்கள் கருதியுள்ளனர். ஆனால், கோபுரத்தின் மீது சுமார் 70 அடி உயரம் வரை சென்ற வாலிபர், அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாக சத்தமிட்டார்.

இதனால், அதிர்ச்சியடைந்த பக்தர்கள், கீழே குதிக்க வேண்டாம் என குரல் ெகாடுத்தனர். ஆனாலும், ‘என்னுடைய செல்போனை கொடுக்காவிட்டால் குதித்து விடுவேன்’ என திரும்ப, திரும்ப தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

ராஜகோபுரத்தையொட்டி அமைந்துள்ள கட்டிடத்தின் வழியாக கோபுரத்தின் மீது ஏறிய தீயணைப்பு வீரர்கள், செல்போனை கொடுப்பதாக பேசியபடியே அந்த வாலிபரை நெருங்கினர். பின்னர், அந்த வாலிபர் கீழே குதிக்காதபடி தடுத்து நிறுத்தி மீட்டனர். அதைத்தொடர்ந்து, அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, புதுச்சேரி அடுத்த காரைக்கால் பகுதியை சேர்ந்த தமிழானாந்தம் மகன் புருஷோத்தமன்(23) என்பது தெரியவந்தது.

டிப்ளமோ ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்துள்ள இவர், கடந்த 2 ஆண்டுகளாக மனநிலை பாதித்து சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது. மேலும், வீட்டை விட்டு வெளியேறி கடந்த 3 மாதங்களாக திருவண்ணாமலையில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில், அவரிடம் இருந்த செல்போனை நேற்று மதியம் ஆட்டோ டிரைவர் ஒருவர் அபகரித்து சென்றுள்ளார். அதனால், ராஜகோபுரத்தின் மீது ஏறிய புருஷோத்தமன், கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, புருஷோத்தமனை அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால், கோயில் அருகே பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

More
>