×

உயர்நீதிமன்ற உத்தரவுபடி போலீஸ் பாதுகாப்புடன் போடியில் கோயில் அகற்றம்

போடி : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுபடி போடியில் காளியம்மன் கோயிலை வருவாய் மற்றும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். போடி சுப்புராஜ் நகர் புதுக்காலனி 4வது தெருவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வீரகாளியம்மன் கோயில் உள்ளது. பொதுமக்கள் தினந்தோறும் கோயிலில் பூஜை நடத்துவதால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும், எனவே கோயிலை அகற்ற வேண்டும் என அப்பகுதியில் குடியிருக்கும் குபேந்திரன் என்பவர் 2019ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த 2020ம் ஆண்டு ஜூலை  8ம் தேதி கோயிலை அகற்ற உத்தரவிட்டது. இதன்படி கடந்த ஆக.16ம் தேதி போடி நகராட்சி, காவல்துறை, வருவாய்த்துறையினர் கோயிலை அகற்ற ஜேசிபி இயந்திரத்துடன் சென்றனர். ஆனால், அப்பகுதி மக்கள் கோயிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் கோயிலை அகற்ற இரண்டு முறை வருவாய் மற்றும் காவ்துறை காலஅவகாசம் அளித்தது. ஆனால், கோயில் அகற்றப்படவில்லை. இந்த நிலையில் போடி தொகுதி எம்எல்ஏவான ஓ.பன்னீர்செல்வம், புதுக்காலனி பகுதிக்குச் சென்று கோயிலை இடித்துக் கொள்ள அறிவுறுத்தினார். வேறு இடத்தில் இடம் தேர்வு செய்து கோயிலை சொந்த செலவில் கட்டித்தருவதாக கூறினார். ஆனால், பொதுமக்கள் அதை ஏற்கவில்லை.

இந்நிலையில் தங்கள் அளித்த காலஅவகாசம் கடந்து விட்டதால் போடி நகராட்சி கமிஷனர் ஷகிலா, தாசில்தார் செந்தில் முருகன், டிஎஸ்பி சுரேஷ் மற்றும் நகர் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் தலைமையில் ஜேசிபி இயந்திரத்துடன்  நேற்று கோயிலை அகற்றச் சென்றனர். இதற்கு  அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.  

கோர்ட் உத்தரவை காட்டி இரண்டு முறை அவகாசம் கொடுத்தும் அகற்றவில்லையென்று தெரிவித்த அதிகாரிகள்,  போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தி  போலீஸ் பாதுகாப்புடன் கோயிலை  இடித்தனர். அங்கிருந்த சிமெண்ட்டால் செய்யப்பட்ட வீரகாளி அம்மன் சிலையை தாசில்தார் செந்தில்முருகன் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றார். கோயில் கூரை. மணி உள்பட மற்ற தளவாட பொருட்கள் போடி நகராட்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags : Temple ,Boda ,High Court , Bodi,Madurai high Court, Temple Demolished, Police
× RELATED சிதம்பரம் கோவிலில் பொது தீட்சிதர்கள்...