புதிய திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு பொலிவு பெறுமா வரதமாநதி அணை?

* சுற்றுலாபயணிகள் எதிர்பார்ப்பு

பழநி : பழநி அருகே வரதமாநதி அணையில் புதிய திட்டப்பணிகள் மேற்கொண்டு பொலிவு பெற வைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.  பழநியில் இருந்து கொடைக்கானல் சாலையில் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது வரதமாநதி அணை. 1978ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணை 116 மில்லியன் கனஅடி முழு கொள்ளளவும், 66.46 அடி உயரமும் உள்ளதாகும். 3 வாய்க்கால்களும், 18 குளங்களும் இந்த அணையின் மூலம் பாசன வசதி பெறுகின்றன. 5 ஆயிரத்து 523 ஏக்கர் நிலங்கள் இந்த அணையின் மூலம் பாசன வசதி பெறுகின்றன.

கொடைக்கானல் செல்லும் வழித்தடத்தில் இந்த அணை உள்ளது. மேலும், பழநி நகருக்கு அருகில் இருக்கும் அணை என்பதாலும் பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களும், கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளும் அதிகளவில் இந்த அணைக்கு வந்து செல்கின்றனர். ஆனால், இந்த அணை போதிய அடிப்படை வசதிகளின்றி உள்ளது. பூங்கா பராமரிப்பின்றி சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து காணப்படுகின்றன. எனவே சுற்றுலா பயணிகளின் நலன்கருதி வரதமாநதி அணையை சீரமைத்து, நவீனப்படுத்த வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன் அடிப்படையில் வரதமாநதி அணையில் செய்ய வேண்டிய சுற்றுலா மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்து திட்ட மதிப்பீட்டுடன் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தமிழக அரசின் சிறப்பு செயலாளர் அறிவுறுத்தி இருந்தார். இதன்படி பழநி வரதமாநதி அணையில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் பூங்கா சீரமைப்பு, படகு குழாம், செயற்கை நீரூற்று, இசை நீரூற்று, அலங்கார மின்விளக்குகள், இணைப்பு சாலைகள், கழிப்பிடங்கள், புல்தரைகள் போன்றவை அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.

ஆனால் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் போதிய புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் வரதாமநதி அணை பொலிவிழந்து காணப்படுகிறது. இப்பணிகள் நடந்தால் வரதமாநதி அணைக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவு வரும் வாய்ப்பு உருவாகி உள்ளது. எனவே, வரதமாநதி அணையை சீரமைக்க வேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More
>