குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு..!!

வாஷிங்டன்: குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி அமெரிக்காவில் நடைபெறவுள்ள குவாட் தலைவர்களின் உச்சி மாநாட்டில் நாளை பங்கேற்கவுள்ளார். அதை தொடர்ந்து நாளை மறுநாள் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையிலும் அவர் உரையாற்றவுள்ளார். இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் வாஷிங்டன் சென்றடைந்தார். அமெரிக்காவிற்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்து மற்றும் அமெரிக்க ராணுவப்படை தளபதிகள் உள்ளிட்டோர் மோடியை வரவேற்றனர். விமான நிலையத்திலும், பிரதமர் மோடி தங்கவுள்ள இடத்திலும் காத்திருந்த இந்திய வம்சா வழியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு பைடன் தலைமையில் நாளை வெள்ளை மாளிகையில் நடைபெறவுள்ளது. கடந்த மார்ச்சில் காணொலி மூலம் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, முதன்முறையாக தற்போது நேரடியாக பங்கேற்கவுள்ளார். இதில் கொரோனா வைரஸ், பருவநிலை மாற்றம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து தலைவர்கள் விவாதிக்க உள்ளனர். இதனிடையே அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை இன்று சந்திக்க உள்ள மோடி, அமெரிக்க தொழிலதிபர்கள் உடனான கலந்துரையாடலிலும் பங்கேற்கவுள்ளார். அமெரிக்காவில் புதிய அரசு அமைந்தபின் முதல்முறையாக மோடி அங்கு சென்றுள்ளார்.

Related Stories:

More
>