அழகப்பா பொறியியல் கல்லூரியில் பி.இ இரண்டாம் ஆண்டு கவுன்சலிங் இன்று துவக்கம்

*கல்லூரி முதல்வர் தகவல்

காரைக்குடி : காரைக்குடி அழகப்பசெட்டியார் அரசு பொறியியல் கல்லூரி சார்பில் பி.இ நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இன்று முதல் கவுன்சலிங் துவங்க உள்ளது என கல்லூரி முதல்வர் மனோன்மணி தெரிவித்துள்ளார். காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் பாலிடெக்னிக் மற்றும் பி.எஸ்சி முடித்த மாணவர்களுக்கு பி.இ. பி.டெக் நேரடி இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கை கவுன்சலிங் நடகிறது.

 விண்ணப்ப படிவங்கள் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி ஆன்லைன் மூலம் துவங்கி 30ம் தேதியுடன் முடிந்தது. இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 86ஆயிரத்து 703 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 29,824 பேர் விண்ணப்பித்தனர். இதில் 25,783 தகுதியானவை. இவர்களுக்கான தரவரிசை தயார் செய்யப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் மனோன்மணி கூறுகையில், தொழில்நுட்பக் கல்வித்துறை இயக்குநரின் வழிகாட்டுதலில் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கை கவுன்சலிங் அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் கல்லூரியில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கவுன்சலிங் இன்று துவங்கி அக்டோபர் 11 ம்தேதி வரை இணையதளம் வாயிலாக நடக்கவுள்ளது. மாணவர்களின் தரவரிசை நிலை, கலந்தாய்வு தேதி www.tnlea.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் பங்கேற்கலாம். ஏஐசிடிஇ வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, டிப்ளமோ படிப்பில் எந்த பாடப்பிரிவில் படித்திருந்தாலும், நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கையில் விரும்பிய எந்தவொரு பாடப்பிரிவிலும் சேரலாம். மாணவர்கள் தங்களுக்கான விருப்ப பதிவை பதிவு செய்யும் நாட்களில் விருப்பமான கல்லூரிகளை லாக் செய்ய வேண்டும். தரவரிசைப்படி மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் கல்லூரிகளை அதற்காக ஒதுக்கப்பட்ட நாட்களில் உறுதி செய்ய வேண்டும்.

இறுதி ஒதுக்கீடு வழங்கப்பட்ட பின்னர் அதற்கான ஆணையை டவுன்லோடு செய்து ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பித்து சேர்ந்து கொள்ளலாம். இன்று மற்றும் நாளை(24ம் தேதி) மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் குழந்தைகள், விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு கலந்தாய்வும். 25ம் தேதி முதல் அக்டோபர் 10ம் தேதி வரை பொது கலந்தாய்வு. பி.எஸ்சி மாணவர்களுக்கு 11ம் தேதி என ஆன்லைன் மூலம் நடக்கவுள்ளது. ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், இணை ஒருங்கிணைப்பாளர் உமாராணி ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories:

More
>