தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை காக்க அனைத்து கால்வாய்களும் தூர்வாரப்படுகிறது : காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி தகவல்

காரைக்குடி : பருவமழை காலங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை காக்க கால்வாய்களை தூர்வார வேண்டும் என முதல்வர் உத்தரவின்படி நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து மழைநீர் கால்வாய்களும் தூர்வாரப்பட உள்ளது என எம்எல்ஏ மாங்குடி தெரிவித்தார். காரைக்குடி ஆனந்தமடம் பகுதியில் உள்ள மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணி நடந்தது வருகிறது.

இப்பணியை எம்எல்ஏ மாங்குடி, நகராட்சி ஆணையர் சுதா, நகரமைப்பு அலுவலர் மாலதி, நகர்நல அலுவலர் டாக்டர் கார்த்திகேயன், நகராட்சி பொறியாளர் கோவிந்தராஜ், உதவி பொறியாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.பின்னர் எம்எல்ஏ மாங்குடி தெரிவிக்கையில், ‘‘மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, அதனை உடனே நிறைவேற்ற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதன்படி மக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது துவங்க உள்ள பருவமழை காலங்களில் கால்வாய் அடைப்பால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் தேங்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை தவிர்க்க மழைநீர் செல்லும் அனைத்து கால்வாய்களையும் தூர்வார வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி காரைக்குடி நகராட்சி பகுதியில் சுமார் 25 கிலோ மீட்டருக்கு மேல் மழைநீர் கால்வாய் உள்ளது. இதனை தூர்வாரி சுத்தப்படுத்துவதன் மூலம் கண்மாய்களுக்கு தண்ணீர் தங்கு தடையின்றி செல்லும்.

தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி மக்கள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும். நிலத்தடி நீர் உயர்வதோடு, தண்ணீர் வளரும் கொசுக்களின் மூலம் பரவும் பல்வேறு விதமான நோய்களில் இருந்து மக்களை காக்க முடியும். மக்களின் தேவைகள் அறிந்து தமிழக அரசு செயல்பட்டு வருகிறது’ என்றார்.

நகராட்சி சுகாதார ஆய்வாளர் பாஸ்கரன், நகர தலைவர் பாண்டிமெய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More