ஊரக உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக, ஜனநாயக முறையில் நடத்த வேண்டும்: தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக, ஜனநாயக முறையில் நடத்த வேண்டும் என தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக 9 மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சியில் ஆய்வு நடந்தது. இதில் மாநில தேர்தல் ஆணையச் செயலாளர் சுந்தரவல்லி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும், ஊரக உள்ளாட்சி தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடத்துவதற்கு விவாதிக்கப்பட்டு அறிவுரை வழங்கப்பட்டது.

அதன்படி, மாவட்ட தலைமை அலுவலகங்களில் புகார் பிரிவு அமைத்தல், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் வேட்புமனு தாக்கல் முதல் தேர்வு முடிவு அறிவித்தல் வரையிலான புள்ளிவிவரங்களை பதிவேற்றம் செய்தல், வேட்புமனு தாக்கல் செய்யப்படாத இடங்கள், ஒரு வேட்பு மனு மட்டும் பெறப்பட்ட விவரங்கள் மற்றும் உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்படுவதாக வரப்பெறும் புகார்கள் குறித்த நடவடிக்கை விவரங்கள், கோவிட் 19 பரவலைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், வாக்குப்பதிவு அலுவலர்கள் அனைவருக்கும் கோவிட் 19 தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதி செய்தல்,

தேர்தல் நன்னடத்தை விதிகளை செயல்படுத்துதல், தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல், பதட்டமான மற்றும் பிரச்னைக்குரிய வாக்குசாவடிகளை கண்டறிதல் மற்றும் காவல்துறை அலுவலர்களுடன் கலந்தாலோசித்தல், வாக்கு எண்ணும் மையங்களை அமைத்தல், வீடியோ ஒளிப்பதிவு செய்தல் மற்றும் தேர்தல் நுண்பார்வையாளர்களை நியமித்தல், வாக்கு எண்ணிக்கை மையங்களில் சிசிடிவி கேமரா அமைத்தல், வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள பாதுகாப்பு அறையில் 24 மணி நேரமும் கேமரா மூலம் கண்காணித்தல், வாக்குச்சாவடி சீட்டு பதிவிறக்கம் செய்து அச்சடித்தல்,

வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தல், மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் மாதிரி பயண திட்டம், தேர்தல் பார்வையாளர்களுக்கான மாவட்டங்களில் தேர்தல் பணியாற்ற உரிய ஏற்பாடுகள் செய்து தருதல். மேலும், தேர்தல் நேர்மையாகவும் ஜனநாயக முறையில் நடைபெறுவதையும் உறுதி செய்ய அனைத்து நடவடிகைகளையும் எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

Related Stories:

More
>