×

8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி

துபாய்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட் செய்தது. அன்ரிச் நார்ட்ஜ் வீசிய முதல் ஓவரிலேயே வார்னர் டக் அவுட்டாகி வெளியேற, ஐதராபாத் அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. அடுத்து சாஹாவுடன் வில்லியம்சன் இணைந்தார். இருவரும் தலா 18 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

மணிஷ் பாண்டே 17, கேதார் ஜாதவ் 3 ரன்னில் பெவிலியன் திரும்பினர். ஹோல்டர் 10 ரன் எடுத்து அக்சர் சுழலில் பிரித்வி வசம் பிடிபட்டார். ஓரளவு தாக்குப்பிடித்த அப்துல் சமத் 28 ரன் (21 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ரபாடா வேகத்தில் விக்கெட் கீப்பர் பன்ட் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பொறுப்புடன் விளையாடிய ரஷித் கான் 22 ரன் எடுத்து (19 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) கடைசி ஓவரின் 4வது பந்தில் ரன் அவுட்டானார். சந்தீப் ஷர்மா (0) கடைசி பந்தில் ரன் அவுட்டாக, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 134 ரன் எடுத்தது.

டெல்லி கேப்பிடல்ஸ் பந்துவீச்சில் ரபாடா 3, அன்ரிச் நார்ட்ஜ், அக்சர் படேல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 135 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் களமிறங்கியது. பிரித்வி ஷா 11 ரன்னில் ஆட்டமிழந்தாலும், ஷிகார் தவான் 37 பந்தில் 42 ரன் எடுத்தார். அடுத்து வந்த ஷிரேயாஸ் பொறுப்புடனும், ரிஷப் பண்ட் அதிரடியாகவும் ஆட டெல்லி அணி 17.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 139 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஷிரேயாஸ் 47 ரன் (41 பந்து), ரிஷப் பண்ட் 35 ரன்னுடன் (21) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.


Tags : Delhi team , Delhi won by 8 wickets
× RELATED டெல்லி அணிக்கு 135 ரன்களை வெற்றி இலக்காக...