×

இடி, மின்னலுடன் கனமழை: சென்னை வந்த விமானங்கள் பெங்களூரு திரும்பி சென்றன

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. கத்தார் தலைநகர் தோகாவில் இருந்து நேற்று அதிகாலை 2.20 மணிக்கு 147 பயணிகளுடன் சென்னை வந்த கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் சென்னையில் தரையிறங்க முடியாததால் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. துபாயில் இருந்து 133 பயணிகளுடன் அதிகாலை 2.40 மணிக்கு சென்னை வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானமும் பெங்களூருக்கு திரும்பி சென்றது.

நேற்று அதிகாலை 3.10 மணிக்கு துபாயில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மற்றும் அதிகாலை 3.25 மணிக்கு கொழும்பில் இருந்து வந்த லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஆகியவையும் சென்னையில் தரையிறங்க முடியாததால் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்து பறந்து கொண்டிருந்தன. இதேபோல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களான சிங்கப்பூர், துபாய், சார்ஜா, தோகா, குவைத், ஹாங்காங் மற்றும் கொழும்பு உள்ளிட்ட 9 சர்வதேச விமானங்கள் சுமார் 3 மணி நேரம் காலதாமதமாக புறப்பட்டு சென்றன.

அதிகாலை 4 மணிக்கு மேல் மழை சற்று ஓய்ந்ததும் பெங்களூரு சென்ற விமானங்கள் சென்னைக்கு திரும்பி வந்தன. சென்னையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பெய்த மழையால் சென்னை விமான நிலையத்தில் சர்வதேச விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால், பயணிகள் கடும் சிரமப்பட்டனர்.

Tags : Chennai ,Bangalore , Fuertes lluvias con truenos y relámpagos: los vuelos de Chennai regresaron a Bangalore
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் NIA சோதனை