பள்ளத்தில் இறங்கிய புதுச்சேரி அரசு பஸ்: 50 பேர் உயிர் தப்பினர்

மாமல்லபுரம்: புதுச்சேரியில் இருந்து இசிஆர் சாலை வழியாக சென்னை நோக்கி புதுச்சேரி அரசு பஸ் நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. பஸ்சில் சுமார் 50 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயில் அருகே சென்றபோது, முன்னால் சென்ற கார், சைக்கிளில் சென்றவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் அவர், நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். இதை பார்த்த புதுச்சேரி அரசு பஸ் டிரைவர், அவர் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்டுள்ளார்.

அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், தறிக்கெட்டு ஓடி சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இதில், 50 பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்கள். தகவலறிந்து மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பயணிகளை பத்திரமாக மீட்டனர். பின்னர், ரெக்கவரி வாகனம் மூலம், பஸ்சை பள்ளத்தில் இருந்து மீட்டு, மீண்டும் அதே பஸ்சில் பயணிகளை ஏற்றி அனுப்பினர். தொடர்ந்து, கார் மோதி விபத்தில் சிக்கியவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், விபத்தை ஏற்படுத்திய கார் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

More
>