வீடுகளை காலி செய்யக்கோரி நோட்டீஸ் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகை: மாதவரம் எம்எல்ஏ சமரசம்

புழல்: செங்குன்றத்தில் பொதுப்பணித்துறை அலுவலகத்தை அப்பகுதி பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். செங்குன்றத்தில் பிடபிள்யுடி மற்றும் எம்.கே.காந்தி தெரு உள்ளது. இப்பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று திடீரென செங்குன்றம் பொதுப்பணித்துறை சார்பில் அங்கு வசித்து வந்தவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதில் 21 நாட்களுக்குள் தங்கள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே அருகில் இருந்த செங்குன்றம் பொதுப்பணித்துறை அலுவலகம் சென்று அதன் முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இது குறித்து தகவல் அறிந்ததும், மாதவரம் தொகுதி எம்எல்ஏ எஸ். சுதர்சனம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது உங்களுடைய இடங்களை எடுக்க மாட்டார்கள் என கூறி உடனே அங்கிருந்த பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் முறையிட்டார். அதன் பிறகு  மீதம் இருக்கும் மக்களுக்கும் நோட்டீஸ் கொடுப்பதை நிறுத்துமாறு அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார். இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் பொதுபணித்துறை அலுவலகத்தில் தாங்கள் பெற்ற நோட்டீசை ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து, அதிகாரிகளும், பொதுமக்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

More
>